» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சஞ்சு சாம்சன் சதம் வீண்: வார்னர் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்!

சனி 30, மார்ச் 2019 9:13:19 AM (IST)ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அசத்த ஐதராபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச அரங்கில் நேற்று நடந்த 8வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஐதராபாத்தை எதிர்த்து ராஜஸ்தான் மோதியது. இரு அணிகளும் துவக்க ஆட்டத்தில் பரிதாபமாக தோற்றது. கோல்கட்டாவிடம் ஐதராபாத்தும். பஞ்சாபிடம் ராஜஸ்தானும் வீழ்ந்தன. இந்நிலையில், நேற்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. அதாவது யாருக்கு முதல் வெற்றி என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இது அமைந்தது. இதில், ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரகானே முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. ஐதராபாத் தரப்பில் சாகிப் அல் ஹசன், தீபக் ஹூடா நீக்கப்பட்டு வில்லியம்சன், நதீம் சேர்க்கப்பட்டனர். வில்லியம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரகானே, பட்லர் இருவரும் துவக்கம் தந்தனர். ரஷித்கான் ‘சுழலில்’ பட்லர் (5) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின் ரகானேனுடன் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இணைந்தார். இருவரும் ஐதராபாத் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். பந்து நாலா புறமும் பறக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் வில்லியம்சன் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. 11.5 ஓவரில் ராஜஸ்தான் 100 ரன் கடந்த போதே இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், ரகானே 38 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து சாம்சன் 34 பந்ததில் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த நிலையில், நதீம் பந்தில் ரகானே ஆட்டமிழந்தார். இவர் 70 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அடுத்து ஸ்டோக்ஸ் களம் வந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் தனது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 54 பந்தில் சதம் விளாசினார். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. சாம்சன் 102 (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டோக்ஸ் 16 (9 பந்து, 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், நதீம் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடினன இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு வார்னர்,  பேர்ஸ்டோவ் இருவரும் துவக்கம் தந்தனர். வார்னர் அதிரடியாக விளையாடி அசத்த. மறுமுனையில் பேர்ஸ்டோவ் அவருக்கு கம்பெனி கொடுத்தார். 4.5 ஓவரில் ஐதராபாத் 50 ரன் எடுத்தது. எதிரணி பந்துவீச்சை விளாசிய வார்னர் 26 பந்தில் அரைசதம் அடித்தார். 8.5 ஓவரில் ஐதராபாத் 100 ரன் எடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன் (9.4 ஓவர்) சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் வேகத்தில் வார்னர் சரிந்தார். இவர் 69 ரன் (37 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் வந்தார்.

வார்னர் வெளியேறிய நிலையில், பேர்ஸ்டோவ் விளாசத் துவங்கினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச அரங்கமே அதிர்ந்தது. இருந்தும் இவர் அரைசத வாய்ப்பை 45 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) தவறவிட்டார். உனத்கட் பந்ததில் வில்லியம்சன் (14) நடையை கட்டினார். அடுத்தடுத்து விக்«கேட்டுகள் சரிய விஜய் சங்கர் அதிரடியில் இறங்கினார். இவர் 15 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 35 ரன் எடுத்து ஸ்ரேயாஸ் கோபால் ‘சுழலில்’ சிக்கினார். இதே ஓவரில் மணிஷ் பாண்டே (1) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. 4 ஓவரில் 30 ரன் தேவைப்ட யூசுப் பதானுடன் ரஷித்கான் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. யூசுப் பதான் (16), ரஷித்கான் (15) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory