» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம் கர்ரன் ஹாட்ரிக் சாதனை : 8 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள்..வெற்றியை கோட்டை விட்ட டெல்லி!!!

செவ்வாய் 2, ஏப்ரல் 2019 12:22:49 PM (IST)பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கர்ரனின் ஹாட்ரிக் சாதனை மற்றும் 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது டெல்லி.

டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர் சாம் கரண் அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் ஆடிய பஞ்சாப் 166/9 ரன்களை குவித்த நிலையில், பின்னர் ஆடிய டெல்லி அணி 152 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை இரவு மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் தரப்பில் லோகேஷ் ராகுல், சாம் கரண் ஆகியோர் களமிறங்கினர்.  ராகுல் 15 ரன்களுடன், கிறிஸ் மோரிஸ் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். சாம் கரணும் 20 ரன்களுடன் லேமிச்சேன் பந்தில் அவுட்டானார். 

அவருக்கு பின் வந்த  மயங்க் அகர்வாலும் நிலைத்து ஆடாமல் 6 ரன்னோடு வெளியேறினார். சர்ப்ரகாஸ் கான்-டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 39 ரன்களை சர்ப்ராஸ் எடுத்திருந்த போது லேமிச்சேன் பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 43 ரன்களை எடுத்த மில்லர், கிறிஸ்மோரிஸ் பந்தில் வெளியேறினார்.  ஹார்டஸ் விலிஜோயன் 1 , கேப்டன் அஸ்வின் 3, முருகன் அஸ்வின் 1 என சொற்ப ரன்களோடும், முகமது ஷமி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களுடன் தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது பஞ்சாப். மந்திப் சிங் 29 ரன்களோடு அவுட்டாகாமல் இருந்தார். டெல்லி தரப்பில் கிறிஸ் மோரிஸ் அபாரமாக பந்துவீசி 3-30 விக்கெட்டுகளையும், ரபாடா 2-32, லேமிச்சேன் 2-27 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி தரப்பில் பிரித்வி ஷா-ஷிகர் தவன் களமிறங்கினர். முதல் ஓவரை பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினே வீசினார். அதில் முதல் பந்திலேயே ராகுலிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் எடுத்து அவுட்டானார் பிரித்வி. அதற்கு பின் தவன்-கேப்டன் ஷிரேயஸ் ஐயர் நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க முயன்றனர். தவன் 30 ரன்களுடன் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். 28 ரன்களை எடுத்த ஷிரேயஸ் ஐயர், விலிஜோயன் பந்தில் போல்டாகி அவுட்டானார். அப்போது டெல்லி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களையே எடுத்திருந்தது.

பந்த்-காலின் இங்கிராம் இணை டெல்லியை சரிவில் இருந்து மீட்டது. 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 39 ரன்களை எடுத்த பந்த், ஷமி பந்தில் போல்டானார். நிதானமாக ஆடிய இங்கிராமும் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் சாம்கரண் பந்தில் வெளியேறினார். கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல்பட்டேல் டக் அவுட்டான நிலையில், ஹனுமா விஹாரி 2 ரன்களோடு, ஷமி பந்தில் போல்டானார்.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது டெல்லி. 

அப்போது முதல் பந்தில் ரபாடாவை போல்டாக்கினார் சாம் கரண். அதற்கு அடுத்த பந்திலேயே லேமிச்சேனையும் டக் அவுட்டாக்கினார் சாம். இறுதியில் 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது டெல்லி. பஞ்சாப் தரப்பில் சாம் கரண் அபாரமாக பந்துவீசி 11 ரன்களை மட்டுமே தந்து  4 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 3 விக்கெட்டையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையும் படைத்தார் சாம். அஸ்வின் 2-31, ஷமி 2-27 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஐபிஎல் 2019 சீசனின் முதல் ஹாட்ரிக் இதுவாகும். இது பஞ்சாப் அணி பெறும் 3-ஆவது வெற்றியாகும். ஏற்கெனவே 1 தோல்வி கண்ட பஞ்சாப் தற்போது பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory