» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி - டிவில்லியர்ஸ் அதிரடிக்கு ரஸ்ஸஸ் பதிலடி: பெங்களூரை வென்றது கொல்கத்தா!!

சனி 6, ஏப்ரல் 2019 11:37:26 AM (IST)ஆண்ட்ரே ரஸ்ஸலிடின் நம்ப முடியாத  அதிரடி பேட்டிங்கால், 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வி அடைந்துள்ளது.

இந்த சீசனில் பெங்களூர் அணி தொடர்ந்து தன் ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 205 ரன்கள் குவித்தும், மட்டமான பந்துவீச்சால் தோல்வி அடைந்தது பெங்களூர். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நிதான துவக்கம் அளித்தார். பின்னர், கோலி - டி வில்லியர்ஸ் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்டனர்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். கோலி 49 பந்துகளில் 84 ரன்கள், டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஸ்டாய்னிஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது. கொல்கத்தா அணியில் ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். சுனில் நரைன், ராணா, குல்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன், ரஸ்ஸல் ரன்களை வாரி இறைத்தனர்.

கொல்கத்தா அணி இமாலய இலக்காக 206 ரன்களை எட்டுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால், பெங்களூர் அணியின் பந்துவீச்சில் நிறைய ஓட்டைகள் இருந்தன. கொல்கத்தாவின் பேட்டிங்கில் துவக்க வீரர் சுனில் நரைன் 10 ரன்களில் வெளியேறினார். அதன் பின் கிறிஸ் லின் 43, ராபின் உத்தப்பா 33 ரன்கள் எடுத்தனர். இவர்கள் ரன் ரேட் 9ஐ ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். அடுத்து நிதிஷ் ராணா 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

இடையே தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியாக நின்ற ஆண்ட்ரே ரஸ்ஸல், எப்போதும் போல தன் அதிரடியைக் காட்டினார். 18வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடிக்க, அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் கிடைத்தால் வெற்றி என்ற நிலையில், டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ரஸ்ஸல் 29 ரன்கள் சேர்த்தார். ஒரு ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட நான்கு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் அடித்தார் ரஸ்ஸல். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுக்க கொல்கத்தா அணி இமாலய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. பல கேட்சுகளை தவறவிட்டனர். அனுபவ பந்துவீச்சாளர் டிம் சௌதி 4 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் ஓவருக்கு 16.80, சிராஜ் ஓவருக்கு 15.42 ரன்கள் கொடுத்தனர். சாஹல், நேகி மட்டுமே ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் கொடுத்தனர். சிராஜ் 2.2 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்திருந்தார், இவர் கடைசி நேரத்தில் 2 முறை இடுப்புக்கு மேல் பீமர் வீசி நோ பால் ஆக்கினார். இதனால், அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டது. 18வது ஓவரில் தடை பெற்றார் சிராஜ். இப்படி சுழற்பந்துவீச்சில் சிறப்பாகவும், வேகப் பந்துவீச்சில் பந்துவீச்சில் ஏனோ தானோ என செயல்பட்ட பெங்களூர் அணி 206 ரன்கள் இலக்கை கூட தற்காத்து ஆடமுடியாமல் தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள அந்த அணி புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இடம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory