» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ந்து 6வது முறையாக பெங்களூரு தோல்வி : கேப்டன் கோலி மீது காம்பீர் பாய்ச்சல்!!

திங்கள் 8, ஏப்ரல் 2019 4:55:18 PM (IST)பேட்ஸ்மேனாக விராட் கோலி ஒரு மாஸ்டர். ஆனால் கேப்டன் விராட் கோலி ஒரு அப்ரெண்டிஸ் என முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தில்லி கேபிடல்ஸ் அணி. இதன்மூலம் ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று, பிளேஆஃப் வாய்ப்பைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. டாஸ் வென்ற தில்லி அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது பெங்களூரு. 18.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டை இழந்து 152 ரன்களுடன் வென்றது தில்லி.

கடந்த வெள்ளியன்று, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல். முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசினார் ரஸ்ஸல். 

இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் தலைமைப்பண்பு குறித்து விமரிசித்துள்ளார் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர். ஆங்கில நாளிதழில் அவர் இதுகுறித்து எழுதியுள்ளதாவது: பேட்ஸ்மேனாக விராட் கோலி ஒரு மாஸ்டர். ஆனால் கேப்டன் விராட் கோலி ஒரு அப்ரெண்டிஸ்! அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. பந்துவீச்சாளர்களைக் குறை சொல்வதை விடவும் தோல்விகளுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படித் தேர்வு செய்தது எனப் பலரும் கேட்கிறார்கள்? 2013-14-ல் ஜேக்ஸ் காலிஸுக்கு மாற்றாக ஒரு வீரரைத் தேடிக்கொண்டிருந்தோம். இருந்த சிலரில் ரஸ்ஸலும் ஒருவர். அதற்கு முன்பு தில்லிக்காக இரு சீஸனில் விளையாடியிருந்தார். 7 ஆட்டங்களில் 58 ரன்கள் எடுத்திருந்தார். வேறுவழியின்றிதான் ரஸ்ஸலைத் தேர்வு செய்தோம். ரூ. 60 லட்சத்துக்கு அவரைத் தேர்வு செய்ததால் அது எங்களைப் பாதிக்கவில்லை. பெங்களூர் அணி கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்திலேயே சொதப்பினார்கள். நாதன் கோல்டர் நைலும் மார்கஸ் ஸ்டானிஸும் முழு ஐபிஎல்-லிலும் விளையாட மாட்டார்கள் என அவர்களுக்குத் தெரிந்திருந்தும் ஏன் தேர்வு செய்தார்கள்? 

சின்னசாமி மைதானம் போன்ற பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் அதிவேகப்பந்துவீச்சாளரையே நான் தேர்வு செய்திருப்பேன். கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிராஜ் நோ பால் பிரச்னையால் பாதியில் விலகியபோது மீதமிருந்த ஓவரை வீச ஸ்டானிஸை அழைப்பதற்குப் பதிலாக நான் பவன் நெகியை அழைத்திருப்பேன். வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள ரஸ்ஸல் மிகவும் விரும்புவார் என அனைவருக்கும் தெரியும். கிறிஸ் கெயிலுக்கு எதிரான ஆட்டத்தில் என் பந்துவீச்சாளர்களிடம் நான் கூறுவேன் - எவ்வளவு அடித்தாலும் திட்டங்களை மாற்றதீர்கள்.  அந்த ஆட்டத்தில் பழுத்த அனுபவம் கொண்ட டிம் செளதி, பேட்ஸ்மேன் அடித்தவுடன் பந்துவீச்சில் நிறைய மாற்றங்கள் செய்தார். கோலி அவரிடம் ரஸ்ஸலுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறியிருக்க வேண்டும் என்று கோலியின் தலைமைப்பண்பை விமரிசித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory