» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஞாயிறு 28, ஏப்ரல் 2019 9:54:16 AM (IST)ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் 32 பந்தில் 48 ரன் விளாச ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த ஐ.பி.எல்45வது லீக் போட்டியில் உள்ளூர் அணியான ராஜஸ்தானை எதிர்த்து ஐதராபாத் மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் இடம் பெற்ற இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பினர். இது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர் ஆகியோர் இல்லாத நிலையில், ராஜஸ்தான் விளையாடியது. ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோவ் பங்கேற்கவில்லை. அவரது இடத்தில் தேர்வான வில்லியம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தவிர, இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் கீப்பர் சகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஐதராபாத் அணிக்கு வார்னர், வில்லியம்சன் இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். ஸ்ரேயாஸ் கோபால் ‘சுழலில்’ வில்லியம்சன் (13) கிளீன் போல்டானார். பின் வார்னருடன் மணிஷ் பாண்டே இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுத்து வந்தனர். ஐதராபாத் 11.3 ஓவரில் 100 ரன் எடுத்தது. எதிரணி பந்து வீச்சை விளாசிய மணிஷ் பாண்டே 27 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், தாமஸ் பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். இவர் 37 ரன் (32 பந்து) எடுத்தார். முக்கிய கட்டத்தில் ஸ்ரேயாஸ் கோபால் மீண்டும் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் மணிஷ் பாண்டே 61 ரன் (36 பந்து, 9 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின் ஐதராபாத் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்தது. விஜய் சங்கர் (8), சாகிப் அல் ஹசன் (9), தீபக் ஹூடா (0), சகா (5), புவனேஷ்வர் குமார் (1) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். கடைசி கட்டத்தில் ரஷித்கான் (17), சித்தார்த் கவுல் (0) அவுட்டாகாமல் கைகொடுக்க ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன், தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே, லிவிங்ஸ்டன் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக எதிரணி பந்து வீச்சை லிவிங்ஸ்டன் நாலா புறமும் பறக்க செய்ய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த இருவரும் ஒரு ஓவருக்கு மிக எளிதாக 10 ரன்கள் எடுத்து வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன் (9.1 ஓவர்) சேர்த்த நிலையில், ரஷித் கான் பந்தில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். இவர் 44 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் வந்தார். இவரும் அதிரடியில் இறங்க, ரகானே 39 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) சாகபி அல் ஹசன் பந்தில் வெளியேறினார்.

இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், சஞ்சு சாம்சனுடன் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித் இணைந்தார். 12வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் 100 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது, 6 ஓவரில் 41 ரன் தேவைப்பட்டது. முக்கிய கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் (22) ஆட்டமிழந்தார். இருந்தும் சஞ்சு சாம்சன் அவுட்டாகாமல் அணியை வெற்றி பெறச் செய்தார். ராஜஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், சாகிப் அல் ஹசன், கலீல் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory