» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹெட்மயர் அதிரடியில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்ற பேங்களூரு : சிக்கலில் ஐதராபாத்

ஞாயிறு 5, மே 2019 9:52:30 AM (IST)பெங்களூருவுக்கு எதிரான லீக் போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியுற்றது. இதையடுத்து இந்த அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் நடக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 54வது லீக் போட்டியில் உள்ளூர் அணியான பெங்களூருவை எதிர்த்து முன்னாள் சாம்பியன் ஐதராபாத் மோதியது. பெங்களூரு அணி பிளே-ஆப் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் இருந்தது. தவிர வெற்றியோடு அதிக ரன்ரேட்டும் தேவைப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் அபிஷேக் இடத்தில் யூசுப் பதான் சேர்க்கப்பட்டார். அதே நேரம் பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டாய்னிஸ், பவன் நெகி, கிளாசன் இடத்தில் கிராண்ட்ஹோம், ஹெட்மயர், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர்.

ஐதராபாத் அணிக்கு கப்டில், சகா இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். சகா பவுண்டரியாக விளாச, மறுமுனையில் கப்டில் இரண்டு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 46 ரன் (4.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஷைனி வேகத்தில் சகா (20) சரிந்தார். பின் வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினார். இவரது பந்து வீச்சில் கப்டில் 30 (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மணிஷ் பாண்டே (5) ஆட்டமிழந்தனர். பின் கேப்டன் வில்லியம்சனுடன் விஜய் சங்கர் இணைந்தார். வில்லியம்சன் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் விஜய் சங்கர் அதிரடியில் இறங்கினார். 13.3 ஓவரில் ஐதராபாத் 100 ரன் எடுத்தது.

முக்கிய கட்டத்தில் விஜய் சங்கர் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவர் 27 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். அதே நேரம் வில்லியம்சன் 38 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தமுறையும் வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. யூசுப் பதான் (3), முகமது நபி (4), ரஷித்கான் (1) அணிவகுப்பு நடத்தினர். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய வில்லியம்சன் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார். தவிர, கடைசி பந்தில் புவுனேஷ்வர் குமார் பவுண்டரி விளாச ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 70 (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (7) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3, ஷைனி 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் வேகத்தில் பார்திவ் படேல் டக்-அவுட் ஆனார். 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய கேப்டன் கோஹ்லி (16) கலீல் அகமது பந்தில் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியை தொவீர்ந்து டிவிலியர்ஸ் (1) ஏமாற்ற ரசிகர்கள் உறைந்துபோயினர். இந்த நிலையில், ஹெட்மயருடன் குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தார். ஹெட்மயர் அதிரடியாக விளையாட அவருக்கு குர்கீரத் சிங் கம்பெனி கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 32 பந்தில் அரைசதம் விளாச சரிவிருந்து பெங்களூரு மீண்டது. தவிர 11.5 ஓவரில் பெங்களூரு 100 ரன் கடந்தது. 5 ஓவரில் 47 ரன் தேவைப்பட்டது.

இந்த நேரத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்கீரத் சிங் 39 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித்கான் சுழலில் ஹெட்மயர் சிக்கினார். இவர் 75 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். முக்கிய கட்டத்தில் கலீல் அகமது பந்தில் குர்கீரத் சிங் 65 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. 11 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் டக்-அவுட் ஆனார். கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. முகமது நபி பந்து வீச வந்தார். முதல் இரண்டு பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி விளாச பெங்களூரு அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிராண்ட்ஹோம் (3), உமேஷ் யாதவ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணி தான் விளையாடிய 14 ஆட்டத்தில் 6 வெற்றி, 8 தோல்வி என மொத்தம் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்று மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் முடிவை வைத்தே ஐதராபாத்தின் பிளே-ஆப் கனவு உறுதிசெய்யப்படும். மும்பையை கோல்கடடா வீழ்த்தும் பட்சத்தில் ஐதராபாத் தொடரிலிருந்து வெளியேற்றப்படும். ஆறுதல் வெற்றி பெற்ற பேங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி முதல் சுற்றுடன் வெளியேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory