» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்: கபில் தேவ் கணிப்பு

வெள்ளி 10, மே 2019 12:56:27 PM (IST)

உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை  என, முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், வரும் 30ல் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் ரவுண்டு–ராபின் முறையில் லீக் சுற்றில் மோதுகின்றன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தோனி, கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, முகமது ஷமி, ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரர்களுடன், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை பெற்றுத் தந்த கேப்டன் கபில் தேவ் கூறியது: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது பவுலிங் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இங்கிலாந்து ஆடுகளம், நமது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். ஷமி, பும்ரா உள்ளிட்டோர் மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் பந்துவீசி எதிரணியினருக்கு நெருக்கடி தருவர். தவிர தோனி, கேப்டன் விராத் கோஹ்லியின் அனுபவம் இந்தியாவுக்கு கைகொடுக்கும். ஏனெனில் நிறைய போட்டிகளில் இவர்கள் வெற்றி தேடித் தந்துள்ளனர்.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. டாப்–4 பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடம் பிடித்துவிடும். நான்காவது அணியாக நியூசிலாந்து அல்லது விண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன்பின் இந்திய வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பொறுத்து பைனலுக்கு செல்வது, கோப்பை வெல்வது நிகழும். டுவென்டி–20 போட்டிகளின் வரவால் பேட்டிங் வரிசையில் எந்த ஒரு வீரரும், எந்த இடத்திலும் களமிறங்கி சாதிக்க முடியும். 

துவக்க வீரர், 3வது இடம், 4வது இடம் என, ஒருவரை மட்டும் நம்பி களமிறங்க தேவையில்லை. இது, அந்த வீரரின் மனநிலையை பொறுத்தது. கடந்த 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை பைனலில் யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தோனி பேட்டிங் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இளம் ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை என்னுடன் ஒப்பிடுகின்றனர். இது, தேவையில்லாத நெருக்கடியை அவருக்கு ஏற்படுத்தும். இவர், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது. எந்த ஒரு வீரரையும், மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது. இவ்வாறு கபில் தேவ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory