» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலககோப்பை கிரிக்கெட் : பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்

சனி 25, மே 2019 12:18:09 PM (IST)உலககோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களை தயார்படுத்துவதில் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. கார்டிப்பில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்க அணி, இலங்கையை எதிர்கொண்டது. இலங்கை அணியுடன் மலிங்கா இன்னும் இணையாததால் அவர் இடம் பெறவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், குயின்டான் டி காக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

டாஸ் வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் கருணாரத்னே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. அம்லா (65 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (88 ரன், 7 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். கடின இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 42.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் கருணாரத்னே 87 ரன்களும், முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 64 ரன்களும் எடுத்தனர்.

பிரிஸ்டனில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியை, சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது நபியும், ரஷித்கானும் வெகுவாக கட்டுப்படுத்தினர். அந்த அணி 47.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பாபர் அசாம் (112 ரன், 108 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), சோயிப் மாலிக் (44 ரன்), இமாம் உல்-ஹக் (32 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளும், ரஷித்கான் 9 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹஷ்மத்துல்லா ஷகிடி 74 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். நட்சத்திர வீரர் முகமது ஷாசத் 23 ரன்களில் தசைப்பிடிப்பால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory