» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம் : ஹைலைட்ஸ் வீடியோ!!

திங்கள் 3, ஜூன் 2019 12:04:52 PM (IST)லண்டனில் நேற்று நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-வங்கதேச அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றமாக அம்லா, பிரிட்டோரியஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய பணித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.  

பின்னர் உலக கோப்பையில் யாரும் எட்டிராத இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (23 ரன்) துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆக நேரிட்டது. மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் (45 ரன்), ஷகிப் அல்-ஹசனின் சுழற்பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.  50 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட்டுக்கு 309 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே அந்த அணி இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

 

கோப்பையை வெல்வோம் : டூ பிளெஸ்ஸி நம்பிக்கை

ஆட்டத்துக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னமும் எங்களால் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. முடியாது என நினைத்தால் நான் தென் ஆப்பிரிக்க வீரனாக இருக்கமாட்டேன். அணியின் உற்சாகத்தை மீட்பது எப்படி எனப் பார்க்கவேண்டும். அடுத்த ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக. அவர்களுக்கு அது முதல் ஆட்டம், எங்களுக்கு மூன்றாவது ஆட்டம். தற்போதைய நிலையில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அதை எப்படி மாற்றவேண்டும் எனப் பார்க்கவேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் பலமான அணிகள்தான் போட்டிபோடும். அதை எதிர்கொண்டு தான் நாம் வெல்லவேண்டும்.

வேறு வழியில்லை. நாங்கள் துவண்டு விடமாட்டோம். அதை உறுதியாகக் கூறமுடியும். மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் லுங்கி என்கிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது. இதனால் 15 முதல் 20 ஓவர்களைச் சுழற்பந்துவீச்சாளர்களையும் மிதமான வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டு முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் முதன்மையான திட்டம் போய்விட்டது. அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். இதுபோன்று விளையாடி, அதற்குச் சாக்குப்போக்குகள் சொல்லிவிடலாம் என எந்த ஒரு வீரராவது நினைத்தால் அவர்கள் சவாலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory