» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜோ ரூட், பட்லர் சதம் வீண்: இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்

செவ்வாய் 4, ஜூன் 2019 8:45:23 AM (IST)உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 348 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பட்லர் சதம் அடித்த போதும் பரிதாப தோல்வியை சந்தித்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நாட்டிங்காமில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதியது. இங்கிலாந்து அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. அதே நேரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. எனவே நேற்றைய போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக அமைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஜோடி துவக்கம் கொடுத்தது. வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார் பகர் ஜமான். மறுபக்கம் வோக்ஸ் ஓவரில் தன் பங்கிற்கு தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார் இமாம். 

இந்த ஜோடியின் அதிரடி கைகொடுக்க பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயீன் அலி தலா 3, மார்க் உட் 2 விக்கெட் வீழ்த்தினர். கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷதாப்கான் பந்தில் ஜேசன் ராய் (8) ஆட்டமிழந்தார். சற்றே அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் (32) வகாப் ரியாசிடம் வீழ்ந்தார். இந்த நிலையில், ஜோ ரூட்டுடன் கேப்டன் மார்கன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஹபீஸ் சுழலில் கேப்டன் மார்கன் (9) சிக்கினார். முதல் போட்டியின் கதாநாயகன் ஸ்டோக்ஸ் (13) வெளியேற இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 47 பந்தில் அரைசததம் அடித்தார். இவருக்கு துணையாக விளையாடி பட்லர் 34 பந்தில் அரைசதம் விளாச சரிவிலிருந்து இங்கிலாந்து மீண்டது. தவிர, 31.5 ஓவரிலேயே இங்கிலாந்து 200 ரன் கடந்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 97 பந்தில் சதம் அடித்தார். இருந்தும் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. முக்கிய கட்டத்தில் ஷதாப்கான் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் ஜோ ரூட் 107 ரன் (104 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தது. அடுத்து மொயீன் அலி களம் வந்தார். 10 ஓவரில் 91 ரன் தேவைப்பட்டது. அசத்தலாக விளையாடிய பட்லர் 75 பந்தில் சதம் அடித்தார். இவர் 103 ரன் (76 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து முகமது ஆமிர் வேகத்தில் சரிந்தார். அடுத்து வோக்ஸ் களம் வந்தார். 46.2 ஓவரில் இங்கிலாந்து 300 ரன் எடுத்தது. கடைசி கட்டத்தில் பாக்., பவுலர்கள் சிறப்பாக பந்து விளாச, மொயீன் அலி (19), வோக்ஸ் (21) வெளியேற 2 ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. ஆர்ச்சர் (1) சொதப்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோற்றது. அடில் ரஷித் (6), மார்க் உட் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பாக்., தரப்பில் வகாப் ரியாஸ் 3, முகமத ஆமிர், ஷதாப்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory