» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி முதல் வெற்றி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது!!

புதன் 5, ஜூன் 2019 4:25:48 PM (IST)உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது..

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும் நேர்த்தியாக ஆடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் (13.1 ஓவர்) திரட்டினர். கருணாரத்னே 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிமன்னே வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் (21.2 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை சுலபமாக தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் திரிமன்னே (25 ரன்) கிளன் போல்டு ஆனார். குசல் மென்டிஸ் (2 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோரும் அதே ஓவரில் வீழ்ந்தனர். அடுத்த ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வாவும் (0) வெளியேற்றப்பட்டார்.

வெறும் 5 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இலங்கை அணி தடம்புரண்டது. ஒரு பக்கம் குசல் பெரேரா அரைசதம் அடித்து போராடிய போதிலும் மற்ற வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குசல் பெரேரா 78 ரன்களில் (81 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித்கான், தவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் மழை பாதிப்பு உள்ளிட்ட சூழலை கணக்கிட்டு ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி ஆப்கானிஸ்தான் 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்குள் முகமது ஷாசத் (7 ரன்), ரமத் ஷா (2 ரன்), ஹஸ்மத்துல்லா ஷகிடி (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.இதன் பிறகு இலங்கை பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருது பெற்றார். தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று இருந்த இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory