» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக சாம்பியன் பட்டம் பெற்று புதிய வரலாறு படைத்தார் பி.வி.சிந்து: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 10:19:17 AM (IST)உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனை ஜப்பானின் நúஸாமி ஒகுஹராவை எதிர்கொண்டார் 5-ஆம் நிலை வீராங்கனையான சிந்து. முழுமையான ஆதிக்கம்: முதல் கேமை 21-7 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்ற சிந்து, இரண்டாவது கேமிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அதிலும் 21-7 என கைப்பற்றினார். முதல் கேம் தொடங்கியவுடனே சிந்து அபாரமாக ஆடி 7-1 என முன்னிலை பெற்றார்.

அடுத்தடுத்து பலமான ஷாட்களால் ஒகுஹராவை நிலைகுலையச் செய்த சிந்து 14-2 என மீண்டும் முன்னிலை பெற்றார். இடையில் 2 புள்ளிகளை ஜப்பான் வீராங்கனை பெற்றார். இறுதியில் 16 நிமிடங்களில் 21-7 என முதல் கேமை வசப்படுத்தினார் சிந்து. 38 நிமிடங்களில் வெற்றி: இரண்டாவது கேமிலும் ஒகுஹரா செய்த தவறுகள் அவருக்கு பாதகமாக அமைந்தன. அந்த கேமில் முதல் புள்ளியை அவர் பெற்றாலும், சிந்து சிறப்பாக ஆடி 9-2 என முன்னிலை பெற்றார். அடுத்து ஒகுஹரா 2 புள்ளிகளைப் பெற்ற நிலையில் 9-4 என்ற நிலை இருந்த போதும், சிந்து அடுத்து புள்ளிகளை குவித்து 11-4 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த சிந்து, இறுதியில் 21-7 என இரண்டாவது கேமையும் கைப்பற்றி முதன்முறையாக தங்கப்பதக்கத்துடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் 5 முறை பதக்கம் வென்றிருந்த சீன வீராங்கனை ஸாங் நிங்கின் சாதனையையும் இந்த போட்டியில் சமன் செய்தார் சிந்து. 24 வயதான பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் வெள்ளியுடன் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். 2013, 2014 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம், 2017, 2018 போட்டிகளில் வெள்ளி பதக்கம், 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் வெள்ளி, காமன்வெல்த் போட்டியில் வெள்ளி என தொடர்ந்து வெள்ளிப் பதக்கங்களை வென்று வந்தார். இதனால் சிந்துவுக்கு இறுதிச் சுற்றில் எப்போதும் தோல்வியடைவதே வழக்கம் என்ற விமர்சனம் எழுந்தது. தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதின் மூலம் அதை முறியடித்துள்ளார். மேலும் 2018 வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியிலும் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை வீழ்த்தியதின் மூலம் 2017- இறுதிச் சுற்றில் தான் பெற்ற தோல்விக்கு பழிக்கு பழி வாங்கினார் சிந்து. கடந்த 2017-இல் கிளாஸ்கோவில் உலக போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் ஒகுஹரா-சிந்து மோதினர். இதில் முதல் கேமை 19-21 என ஒகுஹரா கைப்பற்றினார். இரண்டாவது கேமை 22-20 என சிந்து கைப்பற்றிய நிலையில், கடைசி கேம் மிகவும் பரபரப்பாக அமைந்தது. அதில் 20-22 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார் சிந்து. அந்த ஆட்டம் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டன் வரலாற்றில் மிகச்சிறந்த இறுதி ஆட்டமாக இது கருதப்படுகிறது.

தாய்க்கு அர்ப்பணிப்பு

ஹைதராபாதைச் சேர்ந்த சிந்துவின் பெற்றோர் பி.வி. ரமணா, பி. விஜயா. அவரது தாயாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்ற நிலையில் தனது முதல் தங்கப் பதக்கத்தை தாய்க்கு அர்ப்பணிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிந்து.

உலகப் போட்டியில் முதல் தங்கம்

ஏற்கெனவே உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் 2 வெண்கலம் வென்றிருந்த சிந்து, 2017 இறுதிச் சுற்றில் ஒகுஹராவிடமும், 2018-இல் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடமும் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தற்போது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

உலக சாம்பியன் போட்டியில் சிந்து தங்கம் வென்றது தலைமுறை கடந்து ஊக்கம் தரும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி பதிவிட்டுள்ளதாவது: திறமை வாய்ந்த சிந்து, மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். உலக பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். பாட்மிண்டனில் அவரது அர்ப்பணிப்பு, நாட்டம் அளப்பரியது. சிந்துவின் வெற்றி தலைமுûயைக் கடந்து ஊக்கம் தரும் என்றார்.

அற்புதமாக ஆட்டம், முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுகள், இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர். சச்சின், முன்னாள் கிரிக்கெட் வீரர்: வியக்கத்தக்க சாதனை புரிந்ததின் மூலம் அனைத்து இந்தியர்களையும் கெளரவப்படுத்தியுள்ளார் சிந்து. சாம்பியன்களை உருவாக்க அரசு தொடர்ந்து ஊக்கம், ஆதரவு தரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory