» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!!

வியாழன் 19, செப்டம்பர் 2019 10:44:01 AM (IST)தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் கேப்டன் கோலியின் அதிரடி அரைசதம் காரணமாக இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 ஆட்டம் மொஹாலியில் நேற்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் நல்ல தொடக்கத்தைத் தந்தார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹென்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு, டி காக்குடன் ஜோடி சேர்ந்த பவுமா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இந்த இணை தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டி, அதன்பிறகு, அதிரடிக்கு மாறியது. கேப்டன் டி காக்கும் தனது அரைசதத்தை எட்டினார். இந்நிலையில், ஆட்டத்தின் முக்கியக் கட்டமான 10 முதல் 15 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. முதலில் அரைசதம் அடித்த டி காக் கோலியின் அட்டகாசமான கேட்ச்சால் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, வான் டர் டஸனும் 1 ரன்னுக்கு ஜடேஜா சுழலில் அவரிடமே கேட்ச் ஆனார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணியின் ரன் வேகம் மீண்டும் சரிந்தது. 

இதையடுத்து, பவுமா 18-வது ஓவரில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்த மில்லர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, சைனியின் கடைசி ஓவரில் ஃபெலுவாயோ மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது.  இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், சைனி, ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.   

இதையடுத்து, 150 ரன்கள் என்ற இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார். ரோஹித் சர்மா அதிரடியாக இரண்டு சிக்ஸர் அடித்த நிலையில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிகர் தவானுடன் கேப்டன் கோலி இணைந்தார். இந்த இணை துரிதமாக ரன் சேர்த்து விளையாடியது. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு வந்தது. 

இந்த நிலையில், ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடயர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்தபோதிலும், விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் 40 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், இளம் சுழற்பந்துவீச்சாளர் ஃபோர்துயின் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் கோலி ஒரு இமாலய சிக்ஸரும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பவுண்டரியும் அடிக்க இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ஃபெலுவாயோ, ஷம்ஸி மற்றும் ஃபோர்துயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory