» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி: முதல் டி20-யில் நியூஸியை வீழ்த்தியது இந்திய அணி!!

வெள்ளி 24, ஜனவரி 2020 4:42:25 PM (IST)லோகேஷ் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், ஷிவம் டுபே ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

அதிரடி பேட்ஸ்மேன்களான மார்டின் கப்திலும் காலின் மன்ரோவும் ஆரம்பம் முதல் இந்தியப் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்கள். பவர்பிளேயின் முடிவில் நியூஸிலாந்து அணி, 68 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. அதிக ரன்கள் குவிக்கும் மனநிலையில் இருந்த மன்ரோ, 59 ரன்களில் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிராண்ட்ஹோம் ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். 

15-வது ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஷமி வீசிய 16-வது ஓவரில் டெய்லர் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும் எடுத்தார். அந்த ஓவரில் நியூஸி. அணிக்கு 22 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் சஹால் 13 ரன்கள் கொடுத்தாலும் அதிரடியாக விளையாடிய வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். 26 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அணிக்குப் பக்கபலமாக விளங்கினார் வில்லியம்சன்.

கடைசி மூன்று ஓவர்களில் இரண்டு ஓவர்களை பும்ரா வீசுவார் என்பதால் அதைப் பலமாக நம்பியிருந்தார் கோலி. 18-வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 1 ரன்னில் சைஃபெர்டை வெளியேற்றினார் பும்ரா. 19-வது ஓவரை ஷமி நன்றாக வீசி 9 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரின் 2-வது பந்தில் பும்ரா பந்துவீசி முடித்தவுடன் கீழே விழுந்து சிறிது நேரம் எழ முடியாமல் இருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள். எனினும் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் பந்துவீசினார்.  கடந்த ஆறு வருடங்களில் தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்தார் டெய்லர். கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார் பும்ரா.

நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. டெய்லர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் சான்ட்னர் 2 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்திய அணியின் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு, 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ராகுலும் கோலியும் அற்புதமாக விளையாடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆறு ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. 23 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல், 56 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்த கோலி, 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 11.1 ஓவர்களில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. பிறகு வந்த ஷிவம் டுபே, ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து 13 ரன்களில் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

கடைசி 6 ஓவர்களில் 60 ரன்களில். களத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் மணிஷ் பாண்டேவும். சோதி வீசிய 16-வது ஓவரில் 14 ரன்கள் எடுத்தார்கள் இருவரும். இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்து 26 பந்துகளில் அரை சதம் எடுத்தார். கடைசியில் இந்திய அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து முதல் டி20 ஆட்டத்தை வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 58, மணிஷ் பாண்டே 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 2-வது டி20 ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory