» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் விளாசல்: 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்

திங்கள் 27, ஜனவரி 2020 10:20:40 AM (IST)நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற  இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்  முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கப்தில், மன்றோ இருவரும்  நியூசி. இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 48 ரன் சேர்த்தது. கப்தில் 33 ரன் (20 பந்து, 4  பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தாகூர் பந்துவீச்சில் கோஹ்லி வசம் பிடிபட்டார். மன்றோ 26 ரன் எடுத்து (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) துபே பந்துவீச்சில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  

கிராண்ட்ஹோம் 3, கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து  12.3 ஓவரில் 81 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ராஸ் டெய்லர் - செய்பெர்ட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தது. டெய்லர் 18 ரன் எடுத்து பூம்ரா  வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது. செய்பெர்ட் 33 ரன் (26  பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), சான்ட்னர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்  மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தாகூர், பூம்ரா, துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல்  போட்டியின்போது ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த ஆடுகளம், இந்த போட்டியில் பந்துவீச்சுக்கு ஓரளவு ஒத்துழைத்ததால்  பேட்ஸ் மேன்கள் சற்று தடுமாறினர். ரோகித் ஷர்மா 8 ரன், விராத் கோஹ்லி 11 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் பெவிலியன்  திரும்பினர். இந்தியா 5.2 ஓவரில் 39 ரன்னுக்கு முக்கியமான 2 விக்கெட்டை பறிகொடுத்தது.எனினும், கே.எல்.ராகுல் -  ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 86  ரன் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர். ராகுல் 43 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார்.

ஷ்ரேயாஸ் 44 ரன் (33 பந்து, 1  பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சோதி பந்துவீச்சில் சவுத்தீ வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷிவம் துபே அமர்க்களமாக சிக்சர்  அடிக்க, இந்தியா 17.3 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. கே.எல்.ராகுல் 57 ரன் (50 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), துபே 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து  பந்துவீச்சில் சவுத்தீ 2, சோதி 1 விக்கெட் வீழ்த்தினர். ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள்  கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நாளை  மறுநாள் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory