» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!!

புதன் 29, ஜனவரி 2020 10:15:17 AM (IST)



ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் காலிறதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதிக அளவில் நம்பிய கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜுரெல் 15 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வீர் 25 ரன்களும், பிஷ்னோய் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசி திணறடித்தனர். இதனால் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. அதேசமயம் துவக்க வீரர் சாம் ஃபன்னிங், பதற்றமின்றி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். 

அவருடன் ரோவ், ஸ்காட் இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடினர்.  சாம் அரை சதம் கடந்து நம்பிக்கை அளிக்க, ரோவ் 21 ரன்களிலும், ரோவ் 35 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து ஆடிய சாம் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 127 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை அவர் எட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். குறிப்பாக 42-வது ஓவரில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டது. இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் காத்திக் தியாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 3 விக்கெட் எடுத்தார். கார்த்திக் தியாகி ஆட்டநாயகன் விருது பெற்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory