» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித் சர்மா அதிரடி... சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது

புதன் 29, ஜனவரி 2020 4:49:57 PM (IST)நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்றுது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ரன்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது இந்திய அணி. டி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவன் 48 ரன்கள் எடுத்திருந்தார்.  மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் குவிக்கும் வேகம் குறைந்து போனது. 

கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே, ரன் எடுக்கத் தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி. 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களே எடுத்தனர்.  இதனால் சமனில் முடிந்தது.  நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன்  வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.  இந்தியா தரப்பில் பும்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.  நியூசிலாந்து தரப்பில் சவுதி வீசிய ஓவரில் இந்தியா 20  ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் 20 ஓவர் தொடரையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.ரோகித் சர்மா கடைசி இரு பந்துகளில் சிக்சர் அடித்து தேவையான ரன்களை சேர்த்தது இந்தியா வெற்றி பெற உதவியது.  இதன் மூலம் 5போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

இந்த வெற்றிக்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோகித் சர்மா, சூப்பர் ஓவர் என்பது எப்பொழுதும் வேடிக்கையாக இருக்கும்.  அதில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன்.  ஆனால் விளையாடியது இல்லை. இன்று விளையாடியதே எனது முதல் சூப்பர் ஓவர் போட்டியாகும்.  ஒரு ரன் எடுப்பதா? அல்லது அடித்து ஆடுவதா? எப்படி தொடங்குவது என்பது பற்றிய யோசனையே எனக்கு இல்லை.  அதனால் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுவது என நானும், கே.எல். ராகுலும் முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory