» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மீண்டும் சூப்பர் ஓவரில் இந்தியா அசத்தல்: வெற்றியை கோட்டை விட்டது நியூஸிலாந்து அணி

வெள்ளி 31, ஜனவரி 2020 5:34:31 PM (IST)

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 ஆட்டத்தின் சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வில்லியம்சன், கிராண்ட்ஹோமுக்குப் பதிலாக டாம் ப்ரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர் நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர்.

தொடக்க வீரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினார்கள். 2-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கே.எல். ராகுல் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை நகர்த்தினார். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த கோலி, பென்னட் பந்துவீச்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 7 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த கே.எல். ராகுல் சிக்ஸர் அடிக்க முயன்று 26 பந்துகளில் 39 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே, 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சைனி 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸி. தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால், ரன்கள் எடுக்கத் தடுமாறினார்கள் நியூஸிலாந்து தொடக்க வீரர்கள். கப்தில் 4 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு மன்ரோவும் சைஃபர்ட்டும் அற்புதமாக விளையாடி வேகமாக ரன்கள் குவித்தார்கள். 47 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த மன்ரோ, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ப்ரூஸ், சஹால் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாடினார்கள். ஆனால் சைஃபர்ட் - டெய்லர் ஜோடியால் நியூஸிலாந்து அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. 19 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியவில்லை. இதனால் 4-வது டி20 ஆட்டத்தை வெல்லும் நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. 32 பந்துகளில் அரை சதமெடுத்தார் சைஃபர்ட். 

19-வது ஓவரை வீசிய சைனி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற, 7 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை ஷர்துல் தாக்குர் வீசியதால் இந்திய ரசிகர்கள் சிறிது பதற்றம் அடைந்தார்கள். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 24 ரன்களில் வெளியேறினார் டெய்லர். அடுத்த பந்தில் மிட்செல், பவுண்டரி அடித்ததால் நியூஸிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 4 பந்துகளில் 3 ரன்கள். அடுத்தப் பந்தில் சைஃபர்ட்டை ரன் அவுட் செய்தார் ராகுல். இதற்குப் பிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டது. சான்ட்னர் 1 ரன் எடுத்தார். 2 பந்துகளில் 2 ரன்கள். 

ஐந்தாவது பந்தில் மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல். இதனால் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது நியூஸிலாந்து அணிக்கு. அந்தக் கடைசிப் பந்தில் சான்ட்னரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ரன் எடுக்க முயன்று அவர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது. மீண்டுமொரு சூப்பர் ஓவர்! இந்தமுறை சூப்பர் ஓவரில் நம்பிக்கையுடன் பந்துவீசினார் பும்ரா. ஒரு பவுண்டரி அடித்த சைஃபர்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் மன்ரோ ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா வீசிய 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து அணி.

14 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. மீண்டும் சூப்பர் ஓவரில் பந்துவீசினார் செளதி. முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல் அடுத்தப் பந்தில் பவுண்டரி அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த கோலி, 5-வது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 3-வது டி20 ஆட்டம் போலவே இம்முறையும் தோல்வியின் விளம்பில் இருந்து வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய அணி. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது டி20 ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory