» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20யில் இரட்டை சதம் அடிக்க இவரால் மட்டுமே முடியும்: ஆஸி., முன்னாள் வீரர் கணிப்பு!!

திங்கள் 16, மார்ச் 2020 5:43:05 PM (IST)

டி20 கிரிக்கெட்டிலும் இரட்டைச் சதம் அடிக்க ரோஹித் சர்மாவால் மட்டுமே முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக். இவர் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அப்போது, டி20 கிரிக்கெட்டில் எந்த வீரர் முதன்முதலாக இரட்டைச் சதம் அடித்து சாதனை படைப்பார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த பிராட் ஹாக், "தற்போதைய சூழலில் ரோஹித் சர்மாவுக்கு மட்டும்தான் அந்த திறன் இருப்பதாக நான் நினைக்கிறேன். நல்ல ஸ்டிரைக் ரேட், சரியான டைமிங் மற்றும் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிக்ஸ் அடிப்பதற்கான கிரிக்கெட் ஷாட்கள் அவரிடம் உள்ளன" என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக கடந்த 2018-இல் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை கிறிஸ் கெயிலே தன்வசப்படுத்தியுள்ளார். 2013-இல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் ஒரு ஆட்டத்தில் 66 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்கள் விளாசினார்.

டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 118. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை ரோஹித் சர்மாவே படைத்துள்ளார். 2014-இல் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 264 ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மூன்று முறை இரட்டைச் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைச் சதங்களை அடித்த ஒரே வீரரும் ரோஹித் சர்மாதான் என்பது குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory