» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்? கவுதம் கம்பீர் கேள்வி

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 8:34:33 AM (IST)ஓராண்டாக விளையாடாத தோனியை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும்? என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்திய அணி நிர்வாகமும் அவரை ஓரங்கட்டிவிட்டு விக்கெட் கீப்பிங் பணிக்கு லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோரை பயன்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்ய வேண்டும் என்று தோனி திட்டமிட்டு இருந்தார். ஆனால் கரோனா வைரஸ் அச்சத்தால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (நாளை) தள்ளிவைக்கப்பட்டது. இப்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 

இதனால் 38 வயதான தோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக இந்திய முன்னாள் வீரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்வதில் தோனியுடன் இணைந்து முக்கிய பங்காற்றிய கம்பீர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்காவிட்டால் அதன் பிறகு தோனி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவது மிகவும் கடினமாகிவிடும். கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக எந்த போட்டிகளிலும் விளையாடாத அவரை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும்?

தோனிக்கு பொருத்தமான மாற்று வீரராக லோகேஷ் ராகுல் இருக்கக்கூடும். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் அவரது விக்கெட் கீப்பிங் பணியையும், பேட்டிங்கையும் நான் பார்த்து இருக்கிறேன். அவரது விக்கெட் கீப்பிங் திறமை தோனி அளவுக்கு கிடையாது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் பலன் தரக்கூடியவராக இருப்பார். விக்கெட் கீப்பிங்கோடு 3-வது மற்றும் 4-வது வரிசையில் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். எனவே ஐ.பி.எல். நடக்காவிட்டால் தோனி மறுபடியும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு மங்கி போய் விடும். தோனியின் ஓய்வு திட்டம் என்பது அவரது சொந்த விருப்பம். இவ்வாறு கம்பீர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory