» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசியக் கோப்பை டி20 தொடர் ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 10, ஜூலை 2020 5:18:32 PM (IST)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசியக் கோப்பை டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைப் போட்டி எங்கு, எப்போது நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இணையம் வழியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள டி20 உலகக் கோப்பை பற்றி ஐசிசி தன் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு ஆசிய கோப்பைப் போட்டி குறித்த இறுதி முடிவை வெளியிடலாம் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
டி20 ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக வேறு நாட்டில் போட்டி நடைபெறவேண்டிய சூழல் உள்ளது. 2018-ல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது. இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்குப் பதிலாக இலங்கையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட உரிமையை இலங்கைக்கு வழங்கும் பாகிஸ்தான், 2022-ல் இலங்கையில் நடைபெறுவதாக உள்ள ஆசியக் கோப்பைப் போட்டியைத் தனது நாட்டில் நடத்தவும் திட்டமிட்டிருந்தது. 2010-க்குப் பிறகு இலங்கையில் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்றதில்லை. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் ஆசியக் கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்றும் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இந்த வருட டி20 ஆசியக் கோப்பைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்தார். ஒரு இன்ஸ்டகிராம் பேட்டியில் கங்குலி கூறியதாவது: ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் அடுத்த சர்வதேசத் தொடர் எது என்பது தற்போது தெரியவில்லை. அரசு அனுமதி கிடைத்தால் தான் என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவசரப்படவில்லை. வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்றார்.
ஆனால் கங்குலியின் இந்தத் தகவலுக்கு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதன் தலைவர் இஷான் மணி கூறியதாவது: ஆசியக் கோப்பை குறித்த தகவலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரியப்படுத்தும் என அனைவரும் காத்திருக்கிறோம். சில விஷயங்கள் குறித்து அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை கங்குலிக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து எங்களுக்கு எந்த அதிகாரபூர்வத் தகவலும் வரவில்லை என்றார்.
ஒருவழியாக, ஆசியக் கோப்பை 2020 ரத்து செய்யப்பட்டுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள், வீரர்களின் உடல்நலப் பாதுகாப்பு, கடைப்பிடிக்க வேண்டிய தனி மனித இடைவெளி போன்ற காரணங்களால் ஆசியக் கோப்பையை நடத்துவது சவாலாக உள்ளது. வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் எனக் கருதுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசியக் கோப்பை 2021-ல் இலங்கையிலும் 2022-ல் பாகிஸ்தானிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்காக விளையாடுவது அற்புதமான வாய்ப்பு : வாஷிங்டன் சுந்தர்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:57:34 PM (IST)

பிரிஸ்பேன் டெஸ்ட் : நடராஜன், வாஷிங்டன் அறிமுகம் - ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள்!
வெள்ளி 15, ஜனவரி 2021 5:44:22 PM (IST)

டிம் பெய்னின் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன - கவாஸ்கர் காட்டம்
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:10:30 PM (IST)

புஜாரா, அஸ்வின், ரிஷப் அபாரம்: சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்தது இந்தியா!!
திங்கள் 11, ஜனவரி 2021 8:23:36 PM (IST)

பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள் : இந்திய அணி புகார்
சனி 9, ஜனவரி 2021 5:06:18 PM (IST)

தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: சிராஜ் உருக்கம்
வியாழன் 7, ஜனவரி 2021 5:49:15 PM (IST)
