» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து

புதன் 29, ஜூலை 2020 11:38:58 AM (IST)வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 24-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 369 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 197 ரன்களும் எடுத்தன. அடுத்து 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 226 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 10 ரன்களுடன் தத்தளித்தது. 4-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 129 ரன்னில் சுருண்டது. 3 முறை மழை குறுக்கிட்டும் சிறிது நேரத்தில் நின்று போனதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏமாந்து போனார்கள். அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 31 ரன்களும், ஜெர்மைன் பிளாக்வுட் 23 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும் சாய்த்து அசத்தினர். பிராட் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 269 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசும், 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தது. அரைசதத்துடன் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பிராட்டும், வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேசும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்துவது 1912-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 40 புள்ளிகளை வசப்படுத்தியது. கரோனாவின் கோர தாண்டவத்துக்கு மத்தியில் துணிச்சலுடன் உயிர்பாதுகாப்பு மருத்துவ சோதனைகளுடன், ரசிகர்கள் இன்றி இந்த தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory