» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராகுல் டிவாட்டியா போல 2020-ம் வருடம் மாறட்டும்: ராஜஸ்தான் ராயல்ஸ்

திங்கள் 28, செப்டம்பர் 2020 3:34:09 PM (IST)ராகுல் டிவாட்டியா போல 2020-ம் வருடம் மாறட்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் கணக்கில் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது. ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் டிவாட்டியா, தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

9-வது ஓவரின் முடிவில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ராகுல் டிவாட்டியா 4-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். இடது கை பேட்ஸ்மேன் என்பதால் லெக் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் அனுப்பப்பட்டார். 224 ரன்கள் என்கிற இலக்கை விரட்டும் முயற்சியில் இருந்தபோது ஆரம்பக்கட்டத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார் டிவாட்டியா. முதல் 19 பந்துகளில் அவரால் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 

மேக்ஸ்வெல் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன் பிறகு லாங் ஆஃப்பில் பந்தைத் தட்டிவிட்ட பிறகு சிங்கிள் ரன் ஓட மறுத்தார். டிவாட்டியா பேட்டிங் செய்ய வந்தால் பந்துகளை வீணடிப்பார் என அவர் நினைத்தார். இதனால் டிவாட்டியா மேலும் அவமானப்படுத்தப்பட்டார்.  17-வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை. ஆடுகளத்தில் டிவாட்டியா இன்னும் இருந்ததால் நம்பிக்கை இழந்தார்கள் ராஜஸ்தான் அணி ரசிகர்கள்.

கடைசிக்கட்டத்தில் காட்ரெல் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார் டிவாட்டியா. 6-வது பந்திலும் மற்றொரு சிக்ஸர். 5 சிக்ஸர்களுடன் அந்த ஓவரில் 30 ரன்களை டிவாட்டியா எடுத்தபோது கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் திகைத்தது. பிறகு ஷமி பந்துவீச்சில் இன்னொரு சிக்ஸர் அடித்து மொத்தமாக 7 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் டிவாட்டியா. கடைசியில் வெற்றிக்கனியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் கணக்கில், 2020-ம் வருடம், ராகுல் டிவாட்டியா போல தடாலடியாக மாறட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனாவால் உலக மக்கள் பல்வேறு துன்பத்துக்கும் சிக்கல்களுக்கும் ஆளாகியுள்ள இந்தச் சூழலில் இந்த வாசகம் மிகவும் பொருத்தமாக இருப்பதால் பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory