» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்: 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்!

செவ்வாய் 29, செப்டம்பர் 2020 11:14:10 PM (IST)ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் முகமது நபி, விருத்திமான் சஹா நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். டெல்லி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இருவரும் முதல் 5 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரில் வார்னர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்தனர். வார்னர்-பேர்ஸ்டோ கூட்டணி உடையாமல், பவர்-பிளேயில் எடுத்த மந்தமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு மத்தியில் வார்னர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும், பேர்ஸ்டோ கேட்ச் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து ரன்ரேட்டை உயர்த்துவதில் தீவிரம் காட்டிய வார்னர் 45 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அமித் மிஸ்ராவின் சுழற்பந்தில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து பந்து கையுறையில் லேசாக உரசியபடி விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச்சாக சிக்கியது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே (3 ரன்) நிலைக்கவில்லை. 3-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன் நுழைந்தார்.

ஸ்கோர் சீரான வேகத்திலேயே நகர்ந்தது. பேர்ஸ்டோ 53 ரன்களில் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட வில்லியம்சன் 41 ரன்களில் (26 பந்து, 5 பவுண்டரி) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆனால் இந்த முறையும் துவக்க ஆட்டகாரர் ப்ரித்வி ஷா ஏமாற்றினார். அவர் 2 ரன்கள் எடுத்து பெவிலியின் திரும்பினார். தொடர்ந்து களம்கண்ட கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

டெல்லி அணியில் யாரும் நிலைத்துநின்று ஆடவில்லை. தவான் 34, ஹெட்மயா் 21, ரிஷாப் பந்த் 32, ஸ்டோனிஸ் 11, ஆக்ஸர் படேல் 5 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் தில்லி அணியின் தோல்வி உறுதியானது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory