» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கு தயாராகிறோம் : தோனி ஆறுதல்

சனி 24, அக்டோபர் 2020 3:32:27 PM (IST)அடுத்த மூன்று ஆட்டங்கள் இளம் வீரர்களுக்கு அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான வாய்ப்பாக இருக்கும் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியைச் சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் பெரிய வித்தியாசத்தில் வென்று இதர நான்கு அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுக்காமல் இருந்தால் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் இந்தச் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது பற்றியும் அணியின் நிலைமை பற்றியும் தோனி பேசியதாவது: இந்தப் பெரிய தோல்வி வேதனை தருகிறது. என்னென்ன தவறுகளைச் செய்தோம் எனக் கண்காணிக்க வேண்டும். இந்த வருடம் எங்களுக்கானது அல்ல. ஓரிரு ஆட்டங்களில் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்து, நன்றாகப் பந்துவீசி, நன்றாக ஃபீல்டிங் செய்தோம். போட்டியில் தற்போதைய எங்களுடைய நிலைமை நிச்சயமாக வேதனை தருகிறது. எல்லா வீரர்களும் வேதனையில் உள்ளார்கள். அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்தார்கள். அடுத்த மூன்று ஆட்டங்களில் நன்கு விளையாடி, கடைசி இடத்திலிருந்து மேலேறி வர முயற்சி செய்வோம். 

நீங்கள் நன்றாக விளையாடாதபோது அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் ஓர் அணியாக உங்களிடம் உள்ள திறமைக்கேற்றவாறு விளையாடினீர்களா எனப் பார்க்க வேண்டும். அடுத்த வருடம் பற்றி தெளிவாக இருக்கவேண்டும். இதுவரை வாய்ப்பு அளிக்காதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். அவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். எனவே அடுத்த மூன்று ஆட்டங்கள் இதற்கான வாய்ப்பாக இருக்கும். அதை நன்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது அடுத்த வருடத்துக்கான தயார் நிலையாக இருக்கப் போகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory