» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்காக விளையாடுவது அற்புதமான வாய்ப்பு : வாஷிங்டன் சுந்தர்

வெள்ளி 15, ஜனவரி 2021 6:57:34 PM (IST)"டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுவது அற்புதமான வாய்ப்பு. இதற்காக காத்திருந்தேன்" என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. 

அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது. காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான திறமைகள் என்னிடம் இருப்பதாக எப்போதும் உணர்வேன். முதல்தர கிரிக்கெட்டில் நிறைய ஆட்டங்களில் பந்துவீசியுள்ளேன். மேலும் சென்னை முதல் டிவிஷன் லீக் ஆட்டங்களிலும் நிறைய விளையாடியுள்ளேன். எனவே சிகப்பு பந்தில் ஏராளமாகப் பந்துவீசியுள்ளேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். கடந்த சில மாதங்களாக நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். எனவே பந்துவீச நிறைய வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் என்னுடைய பந்துவீச்சுத் திறமை அதிகரித்துள்ளது. நாங்கள் அனைவரும் முதல்தர கிரிக்கெட்டில் நன்கு விளையாடியுள்ளோம். இந்தியாவுக்காக விளையாடுவது அற்புதமான வாய்ப்பு. இதில் திறமையை நன்கு வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory