» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது

வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக பந்து வீசிய தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அதில் 16 விக்கெட்டுகளுடன், 71 யார்க்கர்களும் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணிக்கு வலைபயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வீரர்களின் அடுத்தடுத்த காயம் காரணமாக இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அவர் கடைசியாக இந்திய அணியிலும் கால்பதிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றார். 

மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரே தொடரில் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சிறப்பை பெற்ற 29 வயதான நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தில் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காரில் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை சென்றார். அங்கு அவரது கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள், குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக செண்டை மேளதாளங்கள் முழங்கவும், வாண வேடிக்கையுடனும் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காரில் இருந்து இறங்கிய நடராஜன், அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து அவரது வீடு வரைக்கும் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் பொதுமக்களை பார்த்து அவர் கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடர் என்று கிட்டத்தட்ட 5 மாதங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இடைவிடாது நடராஜன் கிரிக்கெட்டில் பங்கேற்றார். ஐ.பி.எல். போட்டியில் ஆடிய போது அவரது மனைவி பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி விட்டதால் குழந்தையை கூட அவரால் உடனடியாக பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதுவும் இந்திய வீரர் என்ற அந்தஸ்துடன் குடும்பத்தினரை பார்த்ததும் பூரிப்படைந்தார். அவர் கூறுகையில், ‘நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.அனைவருக்கும் நன்றி’ என்றார்.

இருப்பினும் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் 14 நாட்கள் வீட்டில் தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, வெளிநபர்களை சந்திக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் குடும்பத்தினருடன் நெருக்கத்தை தவிர்த்துக் கொண்டார்.

முன்னதாக சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வரவேற்பு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டம் அதிகமாக கூடினால் கொரோனா வைரஸ் தொற்று பரவி விடும். இதனால் பந்தலை அகற்றுமாறு நடராஜனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு நடராஜனின் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின்படி அங்கு அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தல் அகற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory