» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சி அணி 2-வது முறையாக சாம்பியன்

திங்கள் 31, மே 2021 11:36:22 AM (IST)



ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை தோற்கடித்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

66-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சாம்பியன்ஸ் லீக்கில் 13 முறை பட்டம் வென்ற சாதனை படைத்த அணியான ரியல்மாட்ரிட் கிளப் (ஸ்பெயின்) அரைஇறுதியோடு வெளியேறியது. இந்நிலையில் செல்சி- மான்செஸ்டர் சிட்டி இடையிலான இறுதி ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள போர்டோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. 

இரு அணிகளும் ஒரே நாட்டைச் சேர்ந்த கிளப்புகள் என்றாலும் கடுமையாக மல்லுகட்டின. முதல் 40 நிமிடங்களில் கோல் கம்பத்தை நெருங்குவதும், பிறகு கோல் வாய்ப்பை தவற விடுவதுமாக இருந்தன. இதில் 14-வது நிமிடத்தில் செல்சி வீரர் டிமோ வெர்னர் அடித்த நல்ல ஷாட் தடுக்கப்பட்டதும் அடங்கும். பந்து அதிக நேரம் மான்செஸ்டர் சிட்டியின் (58 சதவீதம்) கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் அதிர்ஷ்ட காற்று செல்சி பக்கமே வீசியது.

விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில்  42-வது நிமிடத்தில செல்சி வீரர் ஹவெர்ட்ஸ் சூப்பராக கோல் அடித்தார். சக வீரர் மாசோன் மவுன்ட் தட்டிக்கொடுத்த பந்துடன் தனியாக கோல் எல்லைக்குள் நுழைந்த போது, மான்செஸ்டர் கோல் கீப்பர் எடெர்சன் கம்பத்தை விட்டு வெளியே வந்து பாய்ந்து விழுந்து தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரிடம் சிக்காமல் தாண்டி ஓடியது. அதன் பிறகு கோல் கீப்பர் இன்றி வெறுமையாக இருந்த கோல் வலைக்குள் ஹவெர்ட்ஸ் பந்தை இடது காலால் உதைத்து தள்ளி கோலாக்கினார்.

பதிலடி கொடுக்க போராடிய மான்செஸ்டர் அணியின் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. ஆட்ட நேர முடிவில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டம் சூடியது. ஏற்கனவே 2011-12-ம் ஆண்டும் பட்டத்தை வென்று இருக்கிறது. அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்கு வந்திருந்த மான்செஸ்டர் அணி ஏமாற்றத்திற்கு உள்ளானது. வாகை சூடிய செல்சி அணி ரூ.165 கோடியை பரிசுத்தொகையாக அள்ளியது. 2-வது இடம் பிடித்த மான்செஸ்டர் சிட்டிக்கு ரூ.133 கோடி கிடைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory