» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்த அமெரிக்கா!
வெள்ளி 24, மே 2024 10:22:46 AM (IST)
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அமெரிக்க அணி புதிய வரலாறு படைத்தது.
வங்கதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஹொசைன் ஷாண்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மோனங் படேல் 42 ரன்கள் அடித்தார். வங்கதேச தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாப்பிசுர் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் விரைவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அமெரிக்கா சிறப்பாக பந்து வீசி அசத்தியது. அமெரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் 19.3 ஓவர்களில் 138 ரன்களில் ஆல் அவுட ஆனது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அமெரிக்கா தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹொசைன் ஷாண்டோ 36 ரன்கள் அடித்தார். அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அலிகான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.