» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலகக் கோப்பை : 195 ரன் இலக்கை விரட்டி அமெரிக்கா அபார வெற்றி!
திங்கள் 3, ஜூன் 2024 8:40:25 AM (IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அமெரிக்கா வெற்றியோடு தொடங்கியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா (‘ஏ’ பிரிவு) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் முதலில் கனடாவை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த கனடா 5 விக்கெட்டுக்கு 194 ரன் சேர்த்தது. நவ்னீத் தலிவால் (61 ரன்), நிகோலஸ் கிர்டான் (51 ரன்) அரைசதம் அடித்தனர்.
அடுத்து 195 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய அமெரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டீவன் டெய்லர் ரன் ஏதுமின்றியும், கேப்டன் மோனக் பட்டேல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஆன்ரியாஸ் கவுசும், ஆரோன் ஜோன்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர். ஆட்டத்தின் 14-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜெரிமி கார்டன் வீசிய போது, அந்த ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் சாத்தினர்.
அத்துடன் 2 நோ-பால், 3 வைடு உள்பட 33 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. இதன் மூலம் நெருக்கடியை தணித்த அமெரிக்க பேட்டர்கள் அதன் பிறகு இலக்கை சிக்கலின்றி நெருங்கினர். ஸ்கோர் 173-ஐ எட்டிய ேபாது ஆன்ரியாஸ் கவுஸ் 65 ரன்களில் (46 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். கவுஸ்- ஜோன்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் அமெரிக்க ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இறுதியில் ஜோன்ஸ் தூக்கியடித்த ஒரு மெகா சிக்சருடன் இன்னிங்ஸ் சுபமாக முடிவுக்கு வந்தது.
அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் அமெரிக்கா விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு 169 ரன்களை (கனடாவுக்கு எதிராக) சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 10 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 19 ரன் கிடைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்த வைத்த அமெரிக்கா முதல் போட்டிலேயே வெற்றி பெற்று பிரமாதப்படுத்தியுள்ளது வெற்றிக்கு பிறகு அமெரிக்க ேகப்டன் மோனக் பட்டேல் கூறுகையில், ‘இது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். ஜோன்சும், கவுசும் நெருக்கடியை திறம்பட கையாண்டு ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினர். ஜோன்சின் பேட்டிங் அருமையாக இருந்தது. கணிசமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகை தந்து போட்டியை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன். தற்போது ஆடியது போன்று தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். பாகிஸ்தானோ அல்லது இந்தியாவோ யாருக்கு எதிராக களத்தில் நின்றாலும் அச்சமின்றி விளையாடும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்’ என்றார்.