» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : அயர்லாந்தை வென்றது இந்தியா!

வியாழன் 6, ஜூன் 2024 10:09:13 AM (IST)



டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நேற்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 8 விக்கெட்டுகளில் அயர்லாந்தை எளிதில் வென்றது இந்தியா. 

நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி பவுலர்களில் பும்ரா 3 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஹர்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப் 2, சிராஜ் மற்றும் அக்சர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

எதிர்பார்த்ததைப் போலவே கேப்டன் ரோகித் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இதில் கோலி, 5 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் வந்தார். அவருடன் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித்.

37 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய ரோகித், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆட்டத்தின் போது எதிரணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து அவரது கையில் பட்டு இருந்தது. அதனால் அவர் வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் வந்தார். 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது இந்தியா. பந்த், 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார்.

இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஆடுகளம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். "எனது கை லேசாக வலிக்கிறது. இந்த ஆடுகளத்தை கணிக்க முடியாது என டாஸின் போது சொல்லி இருந்தேன். இந்த ஆடுகளம் தயார் செய்யப்பட்டது ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான். அதனால் அது எப்படி இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் இரண்டாவதாக பேட் செய்த போதும் விக்கெட் செட்டில் ஆகவில்லை என நான் நினைக்கிறேன்.

இந்த ஆடுகளம் பவுலர்களுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட லெந்தில் தொடர்ந்து பந்து வீச வேண்டி உள்ளது. அர்ஷ்தீப் நீங்கலாக எங்கள் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கைகொடுத்தது. அவர் ஆட்டத்தின் தொடக்கத்தில் வீழ்த்திய அந்த இரண்டு விக்கெட்டுகள் எங்களுக்கான டோனை செட் செய்தது.

நாங்கள் இங்கு நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவோம் என எண்ண வேண்டாம். அணியில் பேலன்ஸ் வேண்டும் என்பதற்காக அவர்களை தேர்வு செய்தோம். அதில் இரண்டு பேர் ஆல்ரவுண்டர்கள். ஆடுகள சூழல் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுத்தால் அதன்படி தான் நாங்கள் செல்வோம். தொடரின் பிற்பாதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் உதவுவார்கள். இந்தப் போட்டியில் நாங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தோம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே எனக்கு தெரியவில்லை. இதே கள சூழல் தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இருக்கும் என்றால் அதற்கு தகுந்த வகையில் நாங்கள் தயாராக இருப்போம். இந்த ஆடுகளத்தில் கொஞ்ச நேரம் பேட் செய்த பிறகு தான் என்ன மாதிரியான ஷாட் ஆடினால் சரியா இருக்கும் என்பதை அறிய முடியும்” என தெரிவித்தார்.

வரும் 9-ம் தேதி இதே மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நடைபெற்ற உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினியா போட்டியில் உகாண்டா 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. ஓமன் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி முகம் கண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory