» சினிமா » திரை விமர்சனம்

ஜோக்கர்: தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு!

புதன் 17, ஆகஸ்ட் 2016 4:02:22 PM (IST)

இந்தியாவின் அரசியல், சமூக பகட்டுப் பளபளப்புகளுக்குப் பின் பல்லிளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்... "ஜோக்கர்! மதுரை, அருவாள், குத்துப் பாட்டு, வட்டார வழக்கு, கிளைமாக்ஸ் சோகங்கள்தான் யதார்த்த சினிமா என்பதை உடைத்து நொறுக்கி இருக்கும் ஜோக்கர், உழைப்பு நிறைந்த நிறைவான படைப்பு.

வீட்டில் ஒரு கழிப்பறை கட்டினால் காதலியைக் கைப்பிடிக்கலாம் என்று கிளம்புகிற அப்பாவி இளைஞன் சோமசுந்தரம். கழிப்பறை இருக்கும் வீட்டுக்கு மணப் பெண்ணாக வேண்டும் என்பதைப் பெருங் கனவாகக் கொண்டிருக்கும் பெண் ரம்யா பாண்டியன். எளிய மனிதர்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ராமசாமி. இளம் கணவனை மதுவுக்கு பலி கொடுத்து விட்டு அரசு இயந்திரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் காயத்ரி. இந்த நால்வரையும் நம் அரசியலும், சமூகம் எங்கே கொண்டு நிறுத்தியது என்பது வலி நிறைந்த வரலாறு.

அரசு அறிவிக்கும் கழிப்பறையைக் கட்டிக் காதல் வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறார் சோமசுந்தரம். அதிகாரமும், கட்சிப் பதவிகளும் தின்றது போக பெயருக்கு வீட்டுக்கு வந்து சேருகிறது கழிப்பறை. அரைகுறையாக எழுப்பப்பட்ட கழிப்பறையால் அவர் வாழ்வே கேள்விக்குறியாகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்படும் சோமசுந்தரம், தன்னை "மக்கள் ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டு, ஊரில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தீ கொளுத்துகிறார். கூடவே தன் மனைவியைக் கருணை கொலை செய்ய வேண்டி காத்திருக்கிறார். பின் அந்த போராட்டங்கள் எப்படி நம்மைக் கடந்து செல்கின்றன என்பதை வேதனையும், கண்ணீருமாகப் பதிவு செய்கிறது படம்.

தமிழ் சினிமா வரலாற்றில் இது முக்கியமான சினிமா. இதுவரை திரை தொடாத கதை. அதிகாரமும், அரசு பதவிகளும் எளிய மக்களை எப்படியெல்லாம் புறந்தள்ளப் பார்க்கின்றன என்பதை இவ்வளவு எளிமையாக, வலிமையாக முன் வைத்ததற்காக ராஜு முருகனுக்கு ஒரு பூங்கொத்து! கடைசி வரை வெள்ளந்தியும், இயலாமையுமாக திரியும் நாயகன். காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி. கணவனைக் காவு கொடுத்து விட்டு எதற்காக வாழுகிறோம் என்பதே தெரியாமல் போராட்ட களத்தில் நிற்கும் இன்னொருத்தி என மனதை நிறைக்கும் நாயகிகள். கண்ணீர் கரைக்கும் கிளைமாக்ஸ்... என இது தமிழ் சினிமாவுக்கே புதுசு.

தருமபுரி பக்கத்து கிராமத்தில் வறுமையில் உழலும் எளியவர்களின் கொண்டாட்டங்களும், நகைச்சுவையும் காதலுமாக விரிகிறது படம். எளிய காதலின் வண்ண வண்ணக் கனவுகள். ஊழல் இல்லாமல் கழிவறையைக் கூடக் கட்ட முடியாதா? இந்திய அரசுக்கு எதிரான ஆவேசக் குரல். எளியவர்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வி அதிர வைக்கிறது. பின் நாம் திரையில் பார்ப்பது... நம் வாழ்விலும் எங்கேனும் நடந்திருக்கும் நிராகரிப்பின் வலி! சில எளிய மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் ராஜு முருகனின் தன்னம்பிக்கை தைரியம்.

ஒரு கண்ணில் அப்பாவித்தனமும், இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக சோமசுந்தரம் அபாரம்... "ஒரு கண்ணு காந்தி, இன்னொரு கண்ணு பகத்சிங்... "எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்து வுட்டுருவேன் பாத்துக்க..., "பப்பிரெட்டிப்பட்டி பவன்ல இருந்து வந்த பெட்டிஷன் என்ன ஆச்சு... என்று பேசும் இடமெல்லாம் ஆவேசம்... அதே சமயம் காதல் காட்சிகளிலும் மிளிர்வு. அற்புதம் சோமசுந்தரம்....!

ரம்யா பாண்டியனுக்கு கனமான கதாபாத்திரம். தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுக்கிறார். "பெட்டிஷன் போட்டு, நீதிக்காகக் காத்துக் கிடக்கும் பொன்னூஞ்சல், ஒவ்வொரு போராட்டத்தையும் இணையத்தில் பகிர்வது என துடிப்புடன் இருக்கும் காயத்ரி என ஒவ்வொரு பாத்திரமும் நுட்பமாக வார்க்கப்பட்டிருக்கிறது. பவா செல்லதுரை... அத்தனை அலட்சியமான உடல் மொழி. வசன உச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார். "ஒருத்தி காட்டுற அன்பை விட இந்த உலகத்துல எதுவும் பெருசு இல்லடா... என அவர் பேசி நிற்கிற இடம் அழிக்கவே முடியாத ஓவர் வாய்ஸ்! படத்தின் மிகப் பெரும் பலம் வசனங்கள். புத்திசாலித்தனத்தைக் காட்டாமல் இயல்பான நடையில், ஏற்ற இடங்களில் வசனங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

"நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?, "இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!, "குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி தின்னுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க..., உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா? கக்கூஸ் கட்டுன காசு நாறாது என அதிகாரத்தின் மனசாட்சியையும் உலுக்கும் வசனங்கள்... சிறப்பு!

ராமசாமி பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் சுளீர். "மரம் வைக்கிறவன பாத்து சிரிக்கிறான்... மண்ணு அள்ளுறவன பாத்து கும்புடுறான்... என பேசி உருகும் காட்சி நம் சமூகத்துக்கான குட்டு! பப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை செழியனின் கேமிரா படத்துக்கு பெரும் பலம். போகிறபோக்கில் எக்கச்சக்க மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை, எளிய மனித வாழ்க்கையைத் தூவிக் கொண்டே இருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அழகு. யுகபாரதியின் வரிகளில் காதல் அவ்வளவு அழகு. "ஓல ஓல குடிசையில... பாடல் எளிய மனித காதலின் உச்சம். ரமேஷ் வைத்யாவின் "செல்லம்மா... பாடல் வரிகள் கண்ணீர் பொங்க வைக்கின்றன. பிற்பாதியில் ஏற்படும் தொய்வு படத்தொகுப்பில் இருக்கும் குறை! கமர்ஷியல் சினிமாவுக்கான சங்கதிகள் குறைவு என்கிற போதிலும், டாக்குமெண்ட்ரி தொனியைத் தவிர்ப்பதில் படக்குழுவினரின் உழைப்பு அசர வைக்கிறது."இப்படில்லாம்கூடவா நடக்கும்? என்ற அளவுக்கு மிகைப்படுத்தல் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பதவி, அதிகாரம், லாப நோக்கம் எதுவுமில்லாமல் சக மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வத் தொண்டர்களை ஜோக்கராகப் பார்க்கிறது நமது சமூகம் என்கிற உண்மையைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் திரைப்படம். போலீஸ் காவல், நீதிமன்ற அறிவுறுத்தல், அதிகாரத் தாக்குதல் என நித்தம் நித்தம் கடக்கும் போராட்டக் களங்களை வெறும் செய்திகளாக கடந்து சிரிக்கும் மக்களிடம்... சமூக அவலங்களுக்கு யார் பொறுப்பு என்பதை சிந்திக்கத் தூண்டுகிறது இந்தத் திரைப்படம்.

மினுமினு இந்தியாவின் இருட்டுப் பக்கத்தைக்கொண்டு செதுக்கப்பட்டு இருக்கும் ராஜுமுருகனின் ஜோக்கர், தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory