» சினிமா » செய்திகள்

காமராஜர் போல கல்விக்கு முக்கியத்துவம் தருபவர்கள்தான் இனி நாடாள வேண்டும்: சூர்யா

வியாழன் 7, செப்டம்பர் 2017 4:43:51 PM (IST)

காமராஜரைப் போல கல்விக்கு முக்கியத்துவம் தரும் தலைவர்கள்தான் இனி நாடாள வேண்டும் என்று நடிகர் சூர்யா பேசினார்..

நீட் தேர்வுக்கு எதிரான மாணவி அனிதாவின் தற்கொலை மற்றும் நீட் தேர்வின் அவசியமின்மை குறித்துப் பேசிய சூர்யா, "லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தி சிறந்த பள்ளிகளில் படித்து தனி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், எந்த வசதியும் இல்லாத மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரே தேர்வு என்று நுழைப்பது பெரிய வன்முறை. கல்வி மூலம் ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில் ஒரே தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரீக சமுதாயம் செய்யும் வேலையல்ல.

அனைவருக்கும் பொதுவான தரமான இலவச கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு தகுதிபடுத்துகிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்ன நியாயம்? பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளுக்கு அப்பாவி மாணவர்கள் பாதிப்படைகிறார்கள். ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பொது பள்ளி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவோருக்கே அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 

இந்தியா ஒரே தேசம். ஆனால் மொழி, இனம், பண்பாடு ஒன்று அல்ல. எனவே கல்வி என்பதை மாநில உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற்ற வேண்டும். மாணவர்களின் நலனை பாதிக்கும் எந்த செயல்களையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். தாய்மொழி வழி கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள். எனவே, நுழைவுத்தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் என்பது அநீதியானது. எனவே, அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். அனிதாவின் மரணத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றவையில், ஒட்டு மொத்த கல்வி பிரச்சினைகளையும் தொகுத்து பார்க்க வேண்டும். 

இதை கவனிக்க தவறினால் சமூக நீதிக்கு போராடிய பெரியாரும், ஏழைகளுக்கு கல்விகள் திறந்த காமராஜரும் வாழ்ந்த மண்ணில், இனி வரும் தலைமுறையினருக்கு கல்வி பெயராலேயே சமூக நீதி மறுக்கப்படும். அவர்கள் எதிர்காலம் குருடாக்கப்படும். காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர வேண்டும். அதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுகளை தரும். அனிதா போன்ற அப்பாவி குழந்தைகளை காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதை பெற்றுத்தர வேண்டியது நமது கடமை," என்றார்.


மக்கள் கருத்து

சாமிSep 7, 2017 - 09:03:17 PM | Posted IP 160.2*****

சினிமாக்காரன் அவன் வேலைய பாரு

உண்மைSep 7, 2017 - 05:22:34 PM | Posted IP 122.1*****

நல்ல விஷயம் சூர்யா தம்பி! கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மதம் மாறாமல் வெள்ளைக்காரனுக்கு மண்டியிடாமல் நேர்மையாக வாழ்ந்து மறைந்தார்!

ஆசீர்.விSep 7, 2017 - 04:48:23 PM | Posted IP 122.1*****

அருமையான கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory