» சினிமா » செய்திகள்

ஃபெப்சி ஸ்ட்ரைக் வாபஸ்: படப்பிடிப்புகள் தொடக்கம்!

புதன் 13, செப்டம்பர் 2017 4:03:20 PM (IST)

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரைப்படத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் ஆகியுள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஃபெப்சி அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் பல நிபந்தனைகளை விதித்திருந்ததால், அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் ஃபெப்சி அமைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஃபெப்சி அமைப்பு பெரும் பங்கு வகித்து வருகிறது. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்ததில் இந்தத் தொழிலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 

சலுகைகளைப் பெறுவதில் தயாரிப்பாளர் சங்கத்துடன் பல சச்சரவுகள் இருந்தாலும், எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமா பயணத்துக்கு உதவியிருக்கிறோம். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை உணர்ந்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுக் கொடுத்து வந்திருக்கிறோம். இந்நிலையில், எங்களது அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக புதிய அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ளது. இன்னொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. இது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை நடந்த போராட்டம் எங்களது உரிமைக்கான போராட்டமாக இருந்தது. இனி அடிப்படை வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளது. ஃபெப்சி தொழிலாளர்கள் செப்டம்பர் 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலைமைக்கு காரணம், தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்புதான். இதை உடனே வாபஸ் வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் காலா உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கம் - ஃபெப்சி ஆகிய இரு அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இரு அமைப்புகளிடையே உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இரு தரப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சிக்குப் போட்டியாகப் புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தமாட்டோம் எனத் தயாரிப்பாளர் தரப்பு உறுதியளித்ததால் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து திரைப்படப் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory