» சினிமா » செய்திகள்

மெர்சல் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க முடிவு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஞாயிறு 22, அக்டோபர் 2017 9:42:19 AM (IST)

மெர்சல் பட பிரச்சினை தீவிரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடித்து தீபாவளி அன்று திரைக்கு வந்த மெர்சல் படத்தில், அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மருத்துவர்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசை குறை கூறியிருப்பதாக கூறி, நடிகர் விஜய்யை பா.ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் கூறி வருகிறார்கள். அந்த காட்சிகளை நீக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் மெர்சல் பட அதிபர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜய் நடித்து, டைரக்டர் அட்லி இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் தீபாவளியன்று வெளியாகி தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
 
மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாபெரும் வெற்றி படைப்பான மெர்சல் உருவாக்க கடந்த ஓராண்டு காலம் அயராது பாடுபட்ட விஜய்க்கும், இயக்குனர் அட்லி மற்றும் ஒட்டுமொத்த மெர்சல் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே மெர்சல் படம் குறித்த பல சர்ச்சைகள் எழுந்தன. அவைகளை சரிசெய்து கடும் சிரமங்களுக்கு இடையே ரசிகர்களுக்கு உறுதி அளித்தபடி, தீபாவளியன்று திரைப்படத்தை வெளியிட்டோம். மெர்சல் பின்னணியில் பல கோடி ரூபாய் முதலீடும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு உழைப்பும் அடங்கி உள்ளது.

வெளியான சில தினங்களில் மீண்டும் பல சர்ச்சைகளுக்கு மெர்சல் உள்ளானது, எங்களை மிகுந்த மன வேதனையடைய செய்கிறது. மெர்சல் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துகளை சொல்லும் திரைப்படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும், தரமான மருத்துவம் கிடைக்கவேண்டும் என்ற ஒரு மருத்துவனின் கனவு தான் இந்த திரைப்படத்தின் கரு. நல்ல பொழுதுபோக்கு சித்திரங்களை தந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே, இத்தனை ஆண்டு கால எங்கள் நிறுவனத்தின் நோக்கம். 

எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தம் அடைந்திருந்தால் அதை என்னுடைய சொந்த வருத்தமாகவே நான் கருதுகிறேன். சர்ச்சைகள் குறித்து பா.ஜ.க. வின் மூத்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் எங்கள் படைப்பின் நோக்கம் குறித்தும், எங்கள் நிலை குறித்தும் இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தோம். அவர்களும் எங்கள் விளக்கத்தை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டனர்.

நாங்கள் சந்திக்கும் போது பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அனைவரும், அவர்களை நேரில் சந்திக்க முடிவெடுத்த எங்கள் நேர்மையான அணுகுமுறையை பாராட்டினர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. எதை பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகள் அகற்றப்பட வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory