» சினிமா » செய்திகள்

அருவி படக்குழு மீது லட்சுமி ராமகிருஷ்ணன் சாடல்!!

புதன் 20, டிசம்பர் 2017 4:23:14 PM (IST)

அருவி படக்குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அருவி படத்தின் பெரும்பாலான காட்சிகள் சொல்வதெல்லாம் உண்மை போன்றதொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத்திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். அருவி படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் பலரும் ’சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, அருவி படத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு கடுமையான ட்வீட்களை வெளியிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இயக்குநர், அவர் வேலை செய்த நிகழ்ச்சியில், சேனலில் இது போன்ற விஷயங்களை பார்த்திருக்கலாம். ஆனால் அந்த சேனலை கிண்டல் செய்ய அவருக்கு தைரியம் இல்லை. சொல்வதெல்லாம் உண்மை புகழடைவதற்கு எளிய இலக்காக இருக்கிறது. 

இன்னொரு பெண்ணின் மீது தனிப்பட்ட, மலினமான தாக்குதலை வைக்கும் பெண்ணியத் திரைப்படம். என்ன ஒரு சிறப்பு!! வாழும் நபர்களையும், பெண்களையும் அவர்கள் மதிப்பதில்லை. ஏன் மத உணர்வுகளை மதிக்கப் போகிறார்கள். தனிப்பட்ட முறையில் இன்னொரு பெண்ணைத் தாக்கி ஒரு பெண்ணியப் படத்தை எடுத்தது இந்தப் படத்தின் மலினமான, ஏமாற்றம் தரக்கூடிய அம்சம். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இன்னொரு பெண்ணை அவமதிக்கும், தவறாகப் பேசும் படத்தை ஊடகத்தில் முக்கியமானவர்கள் பாராட்டுவதுதான்.

ஸ்லம்டாக் படம் நினைவுள்ளதா? அது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் நடக்குமாறு நிஜத்தில் அமிதாப்பச்சன் அவரது போட்டியாளர்களை அப்படி நடத்துவார் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் இவரைப் போன்ற முட்டாள்கள், இயக்குநரின் கற்பனைதான் நிஜத்திலும் நடக்கிறது என நம்புகிறார்கள். படத்தை எடுத்தவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை நேரடியாக, நேரலையில், கேமரா முன் என் கேள்விகளை எதிர்கொள்ளட்டும். படத்தின் விளம்பரத்துக்கும் நல்ல வாய்ப்பு. ஏதாவது ஒரு பிரபல சேனல் இதற்கு முன்வருமா? திரைத்துறை பொறுப்பானதாக இருக்க வேண்டும். 

உள்நோக்கம், சொந்த லாபத்துக்காக மலிவான கிண்டல், தனிப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை செய்யக்கூடாது. இது போன்ற முதிர்ச்சியற்றவர்கள் தான் நம் பார்வையாளர்கள். நிகழ்ச்சியின் வடிவம் பற்றி யாருக்காவது பிரச்சினை இருந்தால் அதைப் பற்றிப் பேச வேண்டும். கடந்த 6 வருடங்களாக நான் நிகழ்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கை சிறுமைப்படுத்துதலோ, தாழ்த்திப் பேசுதலோ, அவதூறு கூறுவதோ இருக்கக் கூடாது. நான் சமூக சேவை செய்வதில்லை. ஆனால் எனது வேலையை சமூகப் பொறுப்போடு செய்து வருகிறேன். திரைத்துறை என்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்த முயற்சிக்கிறது.

பெண்கள் தங்களுக்காக மட்டுமல்ல மற்ற பெண்களுக்காகவும் பேசவேண்டும். இயக்குநர் / நடிகரான ஒரு பெண்ணின், சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு பெண்னின் நற்பெயரை குறிவைத்து தாக்குவது மோசமானது. நிகழ்ச்சியைப் பற்றிய கருத்து இருந்தால் விவாதியுங்கள். ஏன் தனிப்பட்ட தாக்குதல்? இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory