» சினிமா » செய்திகள்

அருவி படக்குழுவுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த ரஜினி!!

சனி 23, டிசம்பர் 2017 4:58:50 PM (IST)அருவி படக்குழுவினரை தன் வீட்டுக்கு அழைத்துத் தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.

எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அருவி. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் அருவி படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். பிரபல இயக்குநர் ஷங்கர், அருவி படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார். 

இப்படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநர் அருண் பிரபுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இத்தகவலை அருண் பிரபு ட்விட்டரில் பகிர்ந்தார். இந்நிலையில் அருவி படக்குழுவினரை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. இதையடுத்து இயக்குநர் அருண் பிரபு, கதாநாயகி அதிதி பாலன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகிய மூவரும் ரஜினியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்கள். படத்தை வெகுவாகப் பாராட்டிய ரஜினி, கதாநாயகி அதிதிக்கும் இயக்குநர் அருண் பிரபுவுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டியுள்ளார். 

அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபுவிடம், என்னென்ன படங்களைத் தயாரித்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். தேசிய விருது பெற்ற ஜோக்கர், மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களைத் தயாரித்துள்ளேன் என்று பிரபு பதில் அளித்துள்ளார். அட, நீங்கள் தயாரித்த எல்லாப் படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லாப் படங்களும் தரமான படங்கள். இதே போன்ற படங்களைத் தொடர்ந்து தயாரியுங்கள் என்று உற்சாகமாகப் பேசியுள்ளார் ரஜினி.

அருவி அருமையான படம். ரொம்ப அழுதேன், நிறைய சிரிச்சேன். நான் தனியாகப் படத்தைப் பார்க்கும் போது திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த ஓர் உணர்வு கிடைத்தது. இந்தப் படத்தைக் கொடுத்ததற்காக எங்களைப் போன்ற மக்கள் உங்களுக்குக் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநர் அருண் பிரபுவைப் பாராட்டிய ரஜினி, ரோலிங் சார்... என்கிற படத்தின் வசனத்தையும் அதேபோல கூறி மூவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

அருவி நாயகி அதிதியிடம், அருமையான நடிப்பு. இந்தப் படத்துக்காக எவ்வளவு எடை இழந்தீர்கள் என்று விசாரித்துள்ளார். உங்களைப் போன்ற திறமையானவர்கள் சினிமாவில் நீண்ட நாள் இருக்கவேண்டும். பொங்கல் வரைக்கும் படத்தை விளம்பரம் செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்கியுள்ளார் ரஜினி. அருவி படத்தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory