» சினிமா » செய்திகள்

விஜய் டிவியில் ஜூன் 17-ம் தேதி முதல் பிக் பாஸ் 2 ஒளிபரப்பு: கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்

சனி 5, மே 2018 4:40:05 PM (IST)

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதேசமயம், ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி ஆகியோர் மீது எதிர்மறையான எண்ணம் தோன்றவும் இந்த நிகழ்ச்சி காரணமாக அமைந்தது.

இப்படி கிட்டத்தட்ட 100 நாட்கள் தமிழர்களை ஆர்வத்துடன் பார்க்கவைத்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் எப்போது தொடங்கும் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதுமட்டுமல்ல, அதுவரை ட்விட்டரில் மட்டுமே அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், வெளிப்படையாக அரசியல் பேசிய முதல் மேடையும் இதுதான்.

இன்றைக்கு அவர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். எனவே, இரண்டாவது சீஸனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது. ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சூர்யா, அரவிந்த் சாமி பெயர்கள் கூட இதில் அடிபட்டன.

இவை எல்லாவற்றுக்கும் இப்போது விடை கிடைத்திருக்கிறது. இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார். நமக்குக் கிடைத்த தகவல்படி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமோல் நிறுவனம், 5 வருடங்களுக்கு கமல்ஹாசனுடனும், விஜய் டிவியுடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், அரசியல் நகர்வைப் பொறுத்து அடுத்தடுத்து சீஸன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்விக்கு இப்போது விடை கிடையாது.

ஆனால், இரண்டாவது சீஸனை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த முறையும் சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் வீடு செட் போடப்பட்டு வருகிறது. தற்போது அங்கு வைத்துதான் கமலைக் கொண்டு புரமோஷன் வீடியோ படம்பிடித்து வருகின்றனர். ஜூன் 3 ஆம் தேதி இந்த புரமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜூன் 17 ஆம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory