» சினிமா » செய்திகள்

பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை எதிரொலி: சர்கார் போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்!!

வெள்ளி 6, ஜூலை 2018 5:42:29 PM (IST)

பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் எதிரொலியாக , ‘சர்கார்’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடித்திருப்பதால், இந்தப் படம் அரசியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் (ஜூன்) 21-ம் தேதி மாலை இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. முதன்முதலாக வெளியிடப்பட்ட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த போஸ்டருக்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, 2007-ம் ஆண்டு, ‘இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார் விஜய். அந்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ‘சர்கார்’ போஸ்டரைக் கண்டித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், படத்தில் இருந்து அந்தக் காட்சியை நீக்குமாறு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைப்பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முதற்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை சமீபத்தில் கேட்டுக் கொண்டது.
 
இதன் எதிரொலியாக அந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்திலும் இப்படி சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. ஆனால், இந்த அளவுக்கு அப்போது எதிர்ப்பு எழவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory