» சினிமா » செய்திகள்

இளையராஜா 75 நிகழ்ச்சியை நான் நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பமில்லை: பார்த்திபன் வருத்தம்

சனி 9, பிப்ரவரி 2019 12:49:47 PM (IST)இளையராஜா 75 நிகழ்ச்சியைத் தான் முன்னின்று நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பம் இல்லை எனவும், அதனால்தான் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 2 நாட்கள் நிகழ்ச்சி கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, கடந்த வருடத்தில் இருந்தே திட்டமிட்டு வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். இளையராஜா 75 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக, துணைத் தலைவராக இருந்த இயக்குநர் கெளதம் மேனனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகப் பார்த்திபனை துணைத் தலைவராக நியமித்தனர். 

டிசம்பர் 24-ம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதை அறிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக பல வேலைகளைச் செய்தார் பார்த்திபன். குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தது அவர்தான். இப்படியிருக்கையில், நிகழ்ச்சி நடைபெற்ற ஓரிரு நாட்களுக்கு முன்னர் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். சினிமா வட்டாரத்தில் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் குறித்து, தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் சில ட்வீட்டுகளையும் பதிவிட்டார் பார்த்திபன்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்தது ஏன்? என தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார் பார்த்திபன். இளையராஜா 75 நிகழ்ச்சியைத் தான் முன்னின்று நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ள பார்த்திபன், குறிப்பாக நடிகர்கள் ரமணா மற்றும் நந்தாவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர்களால் தான் அவமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா நிகழ்ச்சி சரியாகத் திட்டமிடப்படவில்லை என்றும் பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுதொடர்பாக ரமணா மற்றும் நந்தாவிடம் விஷால் விசாரிக்காதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory