» சினிமா » செய்திகள்

புதிய கல்விக்கொள்கை கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்: சூர்யா அச்சம்

சனி 20, ஜூலை 2019 4:34:49 PM (IST)

புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்குப் பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும். 

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடர்பாகக் கடந்த வாரம் சூர்யா பேசியதற்கு ஏராளமான எதிர்வினைகள் உருவாகின. சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் சூர்யா பேசியபோது, 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஏன் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ தேசிய கல்விக் கொள்கை குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது. 

இதுதான் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது. நிச்சயமாக, அதில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு. ஆனால், அச்சம் கொடுக்கக் கூடிய நிறைய விஷயங்களும் உள்ளன என்றார். சூர்யாவின் இந்தப் பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பாஜகவினர் சூர்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் அவர் கூறியுள்ளதாவது: கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. 

அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது. அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களில் 54 பேர் மருத்துவர்கள். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். 

ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகி, விருப்பத்துடன் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார். நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்களாகி இருக்கமுடியாது. நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக்கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்குப் பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும். 

சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட சக ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை அறிந்த சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி .  இந்த வரைவு மீதான ஆக்கபூர்வமான கருத்துக்களை அனைவரும் குறிப்பிட்ட இணையத்தளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யுங்கள். மத்திய அரசும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

ஒருவன்Jul 22, 2019 - 11:53:32 AM | Posted IP 108.1*****

ஒரு கூத்தாடி கருத்து சொன்னால் சினிமா பயித்தியம் பிடித்த நிறைய முட்டாள்கள் நம்பும் .. அதே கருத்து சாதாரண மக்கள் கூறினால் மக்கள் மறந்து விடுவார்கள், ஆனால் கூத்தாடிஎல்லாம் படித்து முன்னேறிவந்தவர்கள் கிடையாது நடிப்பு வெறும் நாடகம் மட்டும் தான் , மக்கள் போட்ட பணத்தில் தான் வந்தவர்கள் .

சாந்தன்Jul 21, 2019 - 02:12:32 PM | Posted IP 162.1*****

மக்களின் முன்னேற்றத்திற்கு இதுமாதிரி முடக்குவாதங்கள்தான் காரணம் - புறம்தள்ளி முன்னேறுங்கள் மக்களே - உங்கள் முன்னேற்றம் & நல்வாழ்வு உங்கள் கையில் - அரைவேக்காடுகள் அதுபாட்டுக்கு கத்திக்கொண்டு இருக்கட்டும்

நிஹாJul 20, 2019 - 05:35:35 PM | Posted IP 162.1*****

இவர் கூறிய பல விஷயங்கள் என் கருத்தோடு ஒத்துப்போகின்றன.

சாமிJul 20, 2019 - 05:32:11 PM | Posted IP 162.1*****

தகுதியை வளர்த்து கொள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory