» சினிமா » செய்திகள்

மாணவியின் பேச்சைக் கேட்டு அழுத சூர்யா

ஞாயிறு 5, ஜனவரி 2020 12:29:32 PM (IST)

அகரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் மாணவி ஒருவர் வாழ்க்கையில் கடந்து வந்த தன் கஷ்டத்தைப் பற்றிக் கூறினார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா மேடையிலேயே கண்கலங்கினார்.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்தில் அகரம் அறக்கட்டளையை நடிகர் சூர்யா நடத்தி வருகிறார். அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம்தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று (ஜனவரி 5) நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், மேடையில் அகரம் அறக்கட்டளையில் படித்த தஞ்சாவூரைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகள் பற்றிப் பேசினார். கிணறு வெட்டும் கூலித் தொழிலாளியின் மகளான காயத்ரி, தனது தந்தை புற்றுநோயால் இறந்தது பற்றியும், குடிசை வீட்டில் வசித்தது குறித்தும், கல்லூரி படிக்க வைக்க வசதியில்லாத குடும்பத்தில் பிறந்த தனக்கு அகரம் அறக்கட்டளை உதவியது பற்றியும் பேசினார். கிராமத்திலிருந்து வந்ததால், தன்னை ஏளனமாகப் பார்த்தனர், அவர்களிடம் என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே பி.ஏ ஆங்கிலம் எடுத்துப் படித்தேன் என்றார்.

இறுதியாக, தந்தை இறந்த பிறகு ரூ.200 கூலிக்கு எனது அம்மா 19 கி.மீ பயணித்து வேலைக்குச் செல்வார். நான் கலந்து கொண்டு பேசும் இந்த நிகழ்ச்சிக்குத் தன்னால் வர முடியவில்லை என்று அம்மா வேதனை தெரிவித்தார். நான் மேடையில் பேசுவதைக் கேட்க முடியாத நிலையில், போனில் கேட்டுக்கொள்வதைவிடப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது என்று கூறி போனில் அம்மா காத்திருப்பதாக மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்தபோது, மேடையில் அமர்ந்திருந்த சூர்யா கண்கலங்கிய படி எழுந்து வந்து மாணவிக்குத் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

மாணவியின் பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசுகையில், "என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்குத் திருப்பி உதவும் முயற்சியாகவே அகரம் அறக்கட்டளை ஆரம்பித்தோம். அதன் மூலமாக 2,500 மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக இணை என்கிற திட்டத்தைத் தொடங்கி முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "சிங்கம் படத்தில் சூர்யா வில்லன்களை அடித்ததைப் பார்த்து இவருக்கு மனிதநேயம் இருக்குமா என்று எண்ணினேன். ஆனால் அகரம் அறக்கட்டளை மூலமாக அவர் மாணவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பார்த்த பிறகு அவருடைய மனிதநேயம் என்னை வியக்க வைத்து விட்டது. அரசுப் பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தினசரி 45 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory