» சினிமா » செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறாரா?

சனி 25, ஜனவரி 2020 3:36:55 PM (IST)

ரஜினி கடைசியாக நடிக்க உள்ள படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராக் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதற்கடுத்து ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

சமீபத்தில் கடாரம் கொண்டான் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக 83 என்கிற ஹிந்திப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. அடுத்ததாக, ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை கமல் தயாரிக்கிறார் என்பதுதான் அடுத்தக்கட்டத் தகவல். கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் அதுவே ரஜினி நடிக்கும் கடைசிப் படம், அதற்குப் பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்துவிடுவார் என்றும் அறியப்படுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஜீ சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுக்கு விருது வழங்கினார் கமல். அப்போது பேசிய லோகேஷ், நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. ஆனால் கமலின் அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். அவருடைய படங்கள் தான் கைதி படத்தை இயக்க எனக்கு ஊக்கமாக இருந்தது என்றார். பிறகு பேசிய கமல், என்னுடைய படங்கள் லோகேஷுக்கு ஊக்கமாக இருந்ததில் மகிழ்ச்சி. அப்படிப் பார்க்கும்போது நானும் கைதி படத்தின் இயக்குநர் தான். அவரைப் பற்றி இன்னும் சொல்லலாம். என்றாலும் அதை வேறொரு தருணத்தில் கூறுகிறேன் என்றார். 

இதனால் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப் படத்தின் கதாநாயகனாக கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கவுள்ளார் என்கிற அளவுக்கு இந்த விஷயம் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, ரஜினி - கமல் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் நிஜமாகவே நடக்குமா என்கிற ஆவலில் உள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory