» சினிமா » செய்திகள்
இளையராஜா நோட்டீஸ் விவகாரம்: ரஜினி கருத்து!
சனி 4, மே 2024 3:50:27 PM (IST)
"இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் உள்ள பிரச்னை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கூலி டீசரில் இளையராஜா இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை முறையாக அனுமதி வாங்காமல் அனிருத் பயன்படுத்தியிருப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையாராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில், ”கூலி திரைப்படத்தின் டீசரில் தங்கமகன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த ’வா வா பக்கம் வா’ பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளதாகவும் ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை” என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம், "காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவது இளையராஜாவின் முடிவு. அது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் உள்ள பிரச்னை. கூலி டீசருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.