» சினிமா » செய்திகள்
இயக்குநர் பிரவீன் காந்தி சர்ச்சை கருத்து: - வெற்றிமாறன் பதிலடி
திங்கள் 13, மே 2024 5:33:16 PM (IST)
பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்கள் வளர்ச்சி பெற்ற பிறகு, தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்ததாக இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். இந்த கருத்து சமூகவலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாசார சீர்கேடு என கொந்தளித்த நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டதாக ஆவேசம் அடைந்தார்.
மேலும், சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், நடிகர் ரஞ்சித் சாதியைப் பற்றி படம் எடுத்தால் அது சமூகத்திற்கு நல்லது என்று திடீர் டிவிஸ்ட் கொடுத்தார். தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, வரலாற்றில் நடந்ததை படமாக எடுத்து சாதி ரீதியான பிரச்னையை ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார். நெருப்பை ஊதி பெரிதாக்காமல், அதனை அணைக்க நடிகர் ரஞ்சித் முயற்சிப்பதாக பேரரசு பேசினார்.
சாதியை ஒழிப்பதாகக் கூறி விட்டு, வரலாற்றை அழிக்கக் கூடாது என்றும் பேரரசு அறிவுறுத்தினார். அதே சமயம், இயக்குநர்கள் சாதியை வைத்து வியாபாரிகளாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.ஆக்ரோஷம் மட்டுமின்றி, கலகலப்பாகவும் பேசிய பேரரசு, எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நடிகர் ரஞ்சித்தை ஆம்பள சினேகா என்று விமர்சித்தார். இந்நிலையில், சாதியப் படம் குறித்த இயக்குநர்களின் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளன.
இதுகுறித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று ஒருவர் சொன்னால், அவர் எங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. சாதிய ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு இந்தியா முழுவதும் உள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார்.