» சினிமா » செய்திகள்

மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

வியாழன் 23, மே 2024 4:28:36 PM (IST)



அனுமதியின்றி 'குணா படப்பாடலை' பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான மஞ்சும்மல் பாய்ஸ், மொழிகள் தாண்டி அனைத்து மாநிலங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளும் மேல் வசூலித்துள்ளது.

ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அனுமதியின்றி 'குணா படப்பாடலை' பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பான அந்த நோட்டீசில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory