» சினிமா » செய்திகள்
உடல்நிலை பாதிப்பு... ஷாருக்கான் டிஸ்சார்ஜ்!
வெள்ளி 24, மே 2024 5:20:39 PM (IST)
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.தற்போது ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குணமடைய போதுமான ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியும் உள்ளனர்.
ஷாருக்கானின் உதவியாளர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஷாருக்கானின் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவருக்கும் நன்றி; அவர் நன்றாக இருக்கிறார்; உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் அக்கறைக்கும் நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது குடும்பத்துடன் வந்தார்.
இப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு ஐடிசி நர்மதா ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் ஷாருக்கான்.இந்நிலையில், நேற்று மதியம் திடீரென உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்திருந்தது.