» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சி.எஸ்.கே. விளையாடும் போட்டியைப் புறக்கணியுங்கள்: தமிழர்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள்

புதன் 4, ஏப்ரல் 2018 12:49:30 PM (IST)

சி.எஸ்.கே. விளையாடும் போட்டியைப் புறக்கணியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சி.எஸ்.கே. விளையாடும் போட்டியைப் புறக்கணிப்பதன் சர்வதேச அளவில் கவனத்தைப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். 

இதுகுறித்து தன்னுடைய ப்ளாக்கில் எழுதியுள்ள அவர், "காவிரிப் பிரச்சினையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளைப் பலவிதங்களில், பல வழிகளில் காட்டி வருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்துத் தீர்மானியுங்கள். ஏப்ரல் 10ஆம் தேதி சி.எஸ்.கே.வின் முதல் மேட்ச். 50 ஆயிரம் பேர் அமரக் கூடிய சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்கு காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம், ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் ஒரு சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா?, இந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் திறக்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்ச்சினை, நம் பிரச்சினையாகிவிட்டது. நாம் தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்குத் தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி... உத்வேகம்! இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல், இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சினை என்று நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சினை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிற பிரச்சினை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சினை.

இது தமிழர்களின் பிரச்சினை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப் பிரச்சினை அல்ல. வாழ்வுப் பிரச்சினை. உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப் பிரச்சினை. போதிய நீர் இல்லாமல், இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். உங்கள் தொழில்கள் உட்பட அந்த ஒருநாள் ஸ்டேடியத்துக்குச் செல்ல வேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். 

வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50 ஆயிரம் பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால், 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்தப் பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, சி.எஸ்.கே.வுக்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 4, 2018 - 09:35:19 PM | Posted IP 141.1*****

கிரிக்கெட் ஒரு சூதாட்டம் தான் . அதை தடை செய்ய வேண்டும்

RajkumarApr 4, 2018 - 09:18:43 PM | Posted IP 162.1*****

Wonderful Idea. We will follow it.

என்றும் அன்புடன்..Apr 4, 2018 - 08:40:06 PM | Posted IP 172.6*****

சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.

sportsApr 4, 2018 - 04:56:49 PM | Posted IP 117.2*****

tickets already sold out for this match. More than 15 thousand tickets bought by the salary people and students and that too at more than 1000 rupees & waiting for so many hours in the queue. We can not expect them to boycott unless some rich one can come forward and refund the amount.

தமிழன்Apr 4, 2018 - 04:47:24 PM | Posted IP 172.6*****

சினிமால உள்ள எல்லா பயலுவளும் கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களாப்பா........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory