» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை: ராகுல் காந்தி

சனி 5, ஜனவரி 2019 8:42:22 AM (IST)

2019 மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:2019-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். ரஃபேல் ஒப்பந்த விசாரணை தனது அதிகாரத்துக்கு உள்பட்டது இல்லை என்று தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, அதுதொடர்பாக விசாரிக்கப்படக் கூடாது என்று கூறவில்லை.

ரஃபேல் விவகாரத்தில் இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு ரஃபேல் விமானத்தின் விலையை ரூ.526 கோடியிலிருந்து, ரூ.1,600 கோடியாக அதிகரிக்கும் முடிவை யார் மேற்கொண்டது இந்திய விமானப் படையா? பாதுகாப்புத் துறை அமைச்சரா? அல்லது பிரதமரா? அதேபோல், விமானங்களின் எண்ணிக்கையை 126-இல் இருந்து 36-ஆக குறைக்க இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டதா?

இந்த முடிவுகளை மேற்கொள்ளும்போது தேசத்தின் பாதுகாப்பு கவலைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா? ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏதேனும் கேள்வி எழுப்பியதா? அந்த அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்தது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?

அப்படி எந்தவொரு ஆவணமும் பாதுகாப்புத் துறை வசம் இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்த இயலுமா? ஒருவேளை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவிக்கும் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், பிரதமர் மோடி எந்த அடிப்படையில் அவற்றை மீறிய வகையில் அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டார்?

அதேபோல், ரஃபேல் விமான உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது தொடர்பாகவும் கேள்வி எழுகிறது. அந்த ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு வழங்கினால் மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோய்ஸ் ஹொலாந்த் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதமர், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் மக்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார். 

பின்னர் தனது சுட்டுரைப் பதிவில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ஊழலில் ஈடுபட்டதற்காகவும், அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்கி தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதற்காகவும் பிரதமர் மோடி விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேபோல், இந்தியாவில் புதிய முதலீடுகள் 14 ஆண்டுகள் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக கூறப்படும் ஊடகத் தகவலை சுட்டிக் காட்டி முகநூலில் பதிவிட்ட ராகுல் காந்தி, ஒருவருக்கு (பிரதமர் மோடி) நிர்வாகத்தை கையாளத் தெரியவில்லை. ஒருவருக்கு (ஜேட்லி) பொருளாதாரம் குறித்து ஏதும் தெரியவில்லை. இதனால் நாடு பாதிப்படைகிறது என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJan 5, 2019 - 05:45:10 PM | Posted IP 162.1*****

மாட்டப்போவது பப்புதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory