» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் : தமிழிசை குற்றச்சாட்டு

புதன் 30, ஜனவரி 2019 11:46:50 AM (IST)

மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து நடத்துகிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார். இதற்கான பொதுக்கூட்ட மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பாஸ்போர்ட்டு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. இதனால் மோடி ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதி திருப்பூர் வரும் மோடி ஏராளமான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்திற்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்,ரவிசங்கர் பிரசாத், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்தியநாத் ஆகியோர் வருகிறார்கள். இதனால் வாக்குச்சாவடி அளவில் பாரதிய ஜனதாவிற்கு பலன் அதிகரிக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இதில் தமிழகத்தின் பங்கு நிச்சயம் அதிகம் இருக்கும்.

எதிர்கட்சிகள் விளம்பரத்துக்காக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு பெண்களின் படிப்புக்காக செலவழித்து உள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் போலி ரேசன் கார்டுகள் கண்டறியப்பட்டு உள்ளது. பல லட்சம் போலி லைசென்ஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் 10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு வறுமையே வெளியேறு என்ற கோ‌ஷத்துடன் தான் இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை.ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ராகுல் காந்தி கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. மோடி தொடங்கி வைத்த வங்கி கணக்கில் தான் ராகுல் பணம் போடுவதாக சொல்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்து விட்டு பின்னர் இது குறித்து ராகுல் பேசட்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் 800 விவசாயிகள் தான் பயன் பெற்றனர்.மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என தெரியாமல் அவர் பதட்டத்துடன் இருக்கிறார்.

தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். கூவத்தை சுத்தப்படுத்துவோம் என கூறினார்கள். ஆனால் அதனை செய்யவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து நடத்துகிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.மு.க.ஸ்டாலின், வைகோ, காங்கிரஸ் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது. அவர்களை இலங்கை சம்பவத்தை கேட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள்.ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேறுபாடு உள்ளது.

தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கொடுக்கும் அறிக்கை, பேட்டியை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சரியாக படிக்காமல் பேசி வருகிறார். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசினேன்.

அதற்கு திருநாவுக்கரசர் மற்ற 30 தொகுதிகளை விட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் 10 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தான் நடைபெற்றது. அந்த 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என தான் நான் பேசினேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ரூ. 1300 கோடி மத்திய மந்திரி சபையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory